பாரிஸ் ஒலிம்பிக் 2ம் நாள் அப்டேட்: துப்பாக்கி சுடுதலில் இறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ரமிதா

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாளறிவன், ரமிதா ஆகியோர் விளையாடினர். மொத்தம் 43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப்பெறுவார்கள். இதில் இந்திய வீராங்கனை ரமிதா சிறப்பாக ஆடி 631.5 புள்ளிகளோடு 5-ம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.

அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 வது இடம்பிடித்திருந்தார். 8 வது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும் என்ற நிலையில் நூலிழையில் தோற்றார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன்.

பி.வி.சிந்து வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் ஆடிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மாலத்தீவு வீராங்கனை ரசாக்கை 21-6, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

துடுப்புப் படகில் முன்னேற்றம்: ஆண்களுக்கான துடுப்புப்படகு போட்டியில் ரீப்பேஜ் சுற்றில் இந்திய வீரர் பன்வர் பால்ராஜ் இரண்டாம் இடம்பிடித்தார். இதன்மூலம் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.

இதற்கிடையே, இன்று வில்வித்தை, டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, நீச்சல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE