பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நியூஸிலாந்து அணியை இந்திய ஆடவர் ஹாக்கி அணி எதிர்கொண்டது. வழக்கமான சொதப்பல்களுடன் தொடங்கியது இந்திய அணி. ஆனால், இடையிடையே மீண்டெழுந்தது. கோல் வாங்குவது, பிறகு சமன் செய்வது, பிறகு முன்னிலை பெறுவது, பெற்ற முன்னிலையை இழப்பது என்று கடைசியில் டிரா அல்லது தோல்வி என்ற வழக்கத்துக்கு மாறாக பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக மாற்றி கேப்டன் ஹர்மன்பிரீத் 3-2 என வெற்றியைச் சாதித்தார்.
2-2 என்று டிரா ஆகியிருந்தால் காலிறுதி வாய்ப்பு சிக்கலாகியிருக்கும். இது முதல் போட்டிதான் இருந்தாலும் 4 அணிகள் இந்தப் பிரிவிலிருந்து காலிறுதிக்குத் தகுதி பெறும். இந்தப் போட்டியை விட்டால் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற அணிகளைச் சந்திக்க வேண்டிவரும். அதனால் நியூஸிலாந்தை வென்றேயாக வேண்டும்.
ஆனால், ஹாக்கியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தியா 3-2 என்று முன்னிலை பெற்ற பிறகும் கடைசி 40 விநாடிகளில் நியூஸிலாந்து அணி ஒரு கோல் வாய்ப்பைப் பெற்றது. இந்திய தடுப்பணையை மீறி உள்ளே ஊடுருவிய நியூஸிலாந்து அணியின் ஹெய்டன் பிலிப்ஸும் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷும் நேருக்கு நேர் என்று வந்தனர். ஆனால், ஹெய்டன் பிலிப்ஸ் கோட்டை விட்டார். இந்திய அணி வென்றது. விறுவிறுப்பாக முடிந்தாலும் இரு அணிகளுக்கும் இது நல்ல தொடக்கமாக அமையவில்லை என்றே கூற வேண்டும்.
நியூஸிலாந்து உலகின் சிறந்த ஹாக்கி அணிகளில் ஒன்றல்ல என்றாலும், இந்தியா அவர்களிடம் மண்ணைக் கவ்விய சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு உதாரணம், இந்தியாவில் நடந்த கடந்த உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை காலிறுதிக்கு முன்னேற விடாமல் வெளியேற்றியது.
» பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் இன்றைய போட்டி
» 24 கோடி பேரில் 7 பேர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்பு: பாகிஸ்தானை விமர்சித்த வர்ணனையாளர்
நேற்றும் நியூஸிலாந்து அணியின் அனுபவ வீரர்களின் ஆட்டத்தின் முன் முதல் 15 நிமிடங்களில் இந்திய வீரர்கள் திணறினர். பாஸ்களில் முன்னால் கொண்டு சென்று விட்டு பிறகு பின்னடைவு கண்ட மைனஸ் பாஸ்களினால் நியூஸிலாந்தின் ஆதிக்கத்துக்கே வழிவகுத்தது. நியூஸிலாந்திடம் தங்கள் ஸ்டிக்கிலிருந்து பந்தை நிறைய முறை பறிகொடுத்தனர். அப்படிப்பட்ட பறிகொடுத்தலில்தான் முதல் கால் மணி நேர ஆட்டத்தில் நியூஸிலாந்தின் அனுபவ ட்ராக் பிளிக்கர் சாம் லேன் சக்தி வாய்ந்த கோலை ஸ்ரீஜேஷை தாண்டி அடித்தார்.
2-வது கால் மணி நேர ஆட்டத்தில் கொஞ்சம் பிரஷரை அதிகரிக்க இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. ஹர்மன் பிரீத் ட்ராக் பிளிக்கை தடுத்தார். ஆனால் தடுத்த பந்தை வெளியே அடிக்கும் முயற்சியில் நியூஸிலாந்து சொதப்ப மந்தீப் சிங் இடையில் தன் ஸ்டிக்கை விட கிட்டத்தட்ட ஓன் கோல் போன்ற ஒரு கோல் மந்தீப் சிங் கோலாக கணக்கில் கொள்ளப்பட்டது இந்தியா சமன் கோலை அடித்தது.
3-வது கால் மணி நேர ஆட்டம் சூடுபிடித்தது. இரு அணிகளுமே வெல்லும் முயற்சியை மேற்கொண்டன. அட்டாக்கிங் ஆட்டம் ஆனதால் மைதானத்தில் வீரர்கள் பந்தை எடுத்துச் செல்ல கொஞ்சம் இடம் கிடைத்தது. இந்த கால் மணி நேர ஆட்டத்தில் நியூஸிலாந்து கோல் கீப்பர் டிக்சனும் ஸ்ரீஜேஷும் தலா இரண்டு அட்டகாசமான சேவ்களைச் செய்தனர்.
கடைசியில் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தின் இறுதிக் கணங்களில் டிக்சனிடமிருந்து பட்டுத் திரும்பிய பந்தை இந்திய வீரர் விவேக் சாகர் பிரசாத் கோலுக்குள் செலுத்தினார். ஆனால், நியூஸிலாந்து அணி பந்தை அங்கிருந்து கிளியர் செய்து விட்டோம் என்றும், அதனால் கோல் இல்லை என்றும் கோரினர். ஆனால் ரீப்ளேயில் அது கோல் என்று தெரியவர இந்தியா முன்னிலை பெற்றது.
4-வது மற்றும் இறுதி கால் மணி நேர ஆட்டத்தில் நியூஸிலாந்து கோல் அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டதில் இந்திய வீரரின் காலில் பந்து மூன்று முறை பட, மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளை நியூஸிலாந்து பெற்றது. இதில் 3-வது வாய்ப்பை நியூஸிலாந்து வீரர் சைல்ட் கோலாக மாற்றினார். 2-2 சமன்.
அதன் பிறகு நியூஸிலாந்தின் முயற்சிகளை ஸ்ரீஜேஷ் சுவராக நின்று தடுத்தாட்கொண்டார். உலகின் சிறந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்தான் என்பதை நியூஸிலாந்துக்குக் காட்டினார். 2-2 சமனுக்குப் பிறகு இந்திய அணி அட்டாக்கை கூட்ட அவர்களுக்கு எப்படி 3 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்ததோ இந்தியாவுக்கும் 3 வாய்ப்புகள் கிடைத்தது. இதில் கடைசி வாய்ப்பில் பெனால்டி பகுதியில் நியூஸீலாந்து வீரர் ஃபவுல் செய்ய பெனால்டி ஸ்ட்ரோக் ஆனது. கேப்டன் ஹர்மன் பிரீத் தவறு செய்யவில்லை, கோலாக மாற்ற இந்திய அணி வென்றது.
நாளை அதாவது ஜூலை 29-ம் தேதி இந்திய நேரம் மாலை 4:15 மணிக்கு இந்தியா ஹாக்கியில் அடுத்த சோதனையான அர்ஜெண்டினா அணியைச் சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago