ஒலிம்பிக் 10 மீ. ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் தங்கம் வென்றது சீனா; இந்தியா ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 16-12 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி பதக்கம் வென்று சாதித்துள்ளது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.

இந்நிலையில், துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவின் தகுதி சுற்று இன்று 12.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர். அர்ஜூன் பாபுதா- ரமிதா ஜிந்தால் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர். வாலறிவன் - சந்தீப் சிங் 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இந்தியா வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இறுதி போட்டியில் முதல் 4 இடங்களை சீனா, தென் கொரியா, ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகிய அணிகள் பிடித்தன. இறுதிப் போட்டியின் முதல் சுற்று முடிவில் ஜெர்மனியை 17-5 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்த கஜகஸ்தான் வெண்கல பதக்கம் வென்றது. சீனா - தென்கொரியா இடையிலான இறுதிப் போட்டியில் 16 புள்ளிகள் முன்னேறி சீனா தங்கம் வென்றது. சீனாவை சேர்ந்த தங்கம் வென்ற ஹுவாங் யூட்டிங் - ஷெங் லிஹாவோ இணை ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE