ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன் பிரான்ஸ் அதிவேக ரயில் சேவை பாதிப்பு: 8 லட்சம் பயணிகள் தவிப்பு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் விஷமிகளின் தீவைப்பு உள்ளிட்ட சதிவேலைகள் காரணமாக அதிவேக ரயில் சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன.

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்பால் லட்சக்கணக்காண பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் பிரம்மாண்ட தொடக்க விழாவுக்கு சில மணி நேரம் முன்பு பிரான்ஸின் அதிவேக ரயில் நெட்வொர்கை குறிவைத்து பல்வேறு இடங்களில் சிக்னல் வயர்களை தீவைத்து எரித்தது உள்ளிட்ட சதிவேலைகளை விஷமிகள் குமபல் அரங்கேற்றியது.

இதனால் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் அதிவேக ரயில் சேவை மட்டுமின்றி பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான ரயில் சேவையும் முடங்கியது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தொடக்க விழாவில் பங்கேற்க ஏராளமானோர் தலைநகருக்கு செல்ல திட்டமிருந்தனர். மேலும் விடுமுறை காரணமாகவும் பலர் பயணத்தில் இருந்த நிலையில் விஷமிகள் சதிவேலைகளை அரங்கேற்றியுள்ளனர்.

பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் பாட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், “இது ரயில் வலையமைப்புக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் மற்றும் கடுமையாக குற்றச் செயல். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு பிரான்ஸில் ரயில்சேவை பாதியாக குறைக்கப்பட்டு, வார இறுதி நாட்கள் முழுவதும் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்படும்” என்றார். ரயில்சேவை பாதிப்பால் சுமார்8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே தலைமை செயல் அதிகாரி ஜீன் பியர் கூறினார்.

“இந்த நாசவேலை முற்றிலும் பயங்கரமானது. ஒலிம்பிக் போட்டியை குறிவைப்பது பிரான்ஸை குறி வைப்பதற்கு சமம்” என்றுபிரான்ஸ் விளையாட்டு துறைஅமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெரா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE