கம்பீர் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினை எது தெரியுமா? - ரவி சாஸ்திரியின் கணிப்பு 

By ஆர்.முத்துக்குமார்

புதுடெல்லி: “கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக்கியது ஒரு புத்துணர்வு தரக்கூடியது மற்றும் அவர் சமகாலத்தவர். அவரிடம் புதிதான யோசனைகள், கருத்துக்கள் இருக்கும் என்பன போன்ற சாதகங்கள் இருக்கின்றன” என்று கூறும் ரவி சாஸ்திரி, கவுதம் கம்பீர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதை விவரித்துள்ளார்.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறுகையில், “கம்பீர் சமகாலத்தவர், இப்போதிருக்கும் வீரர்களுடன் சேர்ந்து அணியில் விளையாடியிருப்பவர், ஐபிஎல் தொடர் அவருக்கு பெரிய சீசனாக, வெற்றியாக அமைந்தது. சரியான வயதில் பயிற்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரிடம் புதிய கருத்துக்கள், யோசனைகள் இருக்கும். அவருக்கு அணியில் இருக்கும் அனைத்து வீரர்களையும் தெரியும்.

கவுதம் கம்பீர் ஒரு நோ-நான்சென்ஸ் நபர். அவருக்கென்று உரித்தான எண்ணங்கள், கருத்துகள் இருக்கும். சாதக அம்சம் கொண்ட நல்ல முதிர்ச்சியான அணி அவருக்குக் கிடைத்துள்ளது. நிலைபெற்ற அணி அவருக்குக் கிடைத்துள்ளது. முதிர்ச்சி அடைந்த அணி என்றாலும், அவர்களுக்கும் புது கருத்துக்கள் பயனளிக்கும். எனவே மிகவும் சுவாரஸ்யமான காலம் நமக்காக காத்திருக்கிறது.

கம்பீர் சந்திக்கவிருக்கும் பிரச்சினை என்னவெனில், வீரர்களை நிர்வகிப்பது என்ற ஒன்றுதான். பயிற்சியாளராக மேன் மேனேஜ்மென்ட் என்பது முக்கியமான விஷயம். எனவே இதில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதும் சுவாரஸ்யமான விஷயம். இதற்கான உபகரணங்கள், அனுபவம் அவரிடம் உள்ளது. ஆனால் பிரச்சினை எங்கு வரும் எனில் வீரர்களைப் புரிந்து கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. மிக விரைவில் அவர் அந்த பிரதேசத்தைக் கடக்க வேண்டும். வீரர்களின் பலம் பலவீனம் என்ன, அவர்கள் மனிதர்களாக எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் உணர்வு நிலைகள் என்ன? அவர்களின் ஆளுமைகள் என்னென்ன? ஒரு மனிதரைப் புரிந்து கொள்ள திரைக்குப் பின்னால் நிறைய விஷயங்கள் நடைபெறவே செய்யும்.

இதுதான் கம்பீருக்கு சவாலாக இருக்கும். ஆனால் அவர் சமகால வீரர் என்பதால் இதிலும் பிரச்சினை இருக்கக் கூடாது. இப்போது ஆடும் வீரர்களை அவர் வெளியிலிருந்து பார்த்திருக்கிறார். கேகேஆர் அணியிலும் பார்த்திருப்பார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும் பார்த்திருப்பார். அவர் ஓய்வு பெற்று நீண்ட காலம் ஆகிவிடவில்லை. சமகால கிரிக்கெட் வீரர்களுடன் பழக்கத்தில் தான் இருக்கிறார். லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டும் ஆடினார். இப்போதைக்கு டி20-யில் இருந்து கோலி, ரோஹித், ஓய்வு பெற்று விட்டதால், கம்பீருக்கு பிரச்சினைகள் இல்லை.

இப்போதிருக்கும் டி20 வீரர்கள்தான் அடுத்த உலகக் கோப்பை வரை இருக்கப் போகிறார்கள். ஆனால், இந்தியாவில் புதிய திறமைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே அவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்வதில்தான் கம்பீரின் உண்மையான சவால் அடங்கியிருக்கிறது. பெரிய வரிசையில் வீரர்கள் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர். இது கம்பீருக்கு பெரிய சவால். ஆனால் இது ஒரு நல்ல தலைவலிதான். திறமைக்குப் பஞ்சமில்லையே” என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE