வங்கதேசத்தை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

By செய்திப்பிரிவு

கொழும்பு: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் அணி. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக இறங்கிய திலாரா அக்தெர், முர்ஷிதா காதுன் சொற்ப ரன்களில் வெளியேறினர். இவர்கள் முறையே 6 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அக்தெர் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்களுக்கு நடையைக்கட்டினார். இப்படியாக வங்கதேசத்தின் டாப் ஆர்டரின் 3 விக்கெட்டையும் இந்திய வீராங்கனை ரேணுகா சிங் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

இதன்பின் வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடினார். ஆனால், அவருக்கு சக வீராங்கனைகள் யாரும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மிட் வரிசையில் இறங்கிய வங்கதேச வீராங்கனைகள், இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். கடைசி ஓவர் வரை தாக்குப்பிடிக்க வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா 51 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டானார். இதன்பின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேச அணி. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய அணிக்காக தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷெபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பாக விளையாடி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியை தேடிக்கொடுத்தது. இருவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தனர். குறிப்பாக ஸ்மிருதி மந்தனா பவுண்டரிகளாக விளாசி அதிரடி காண்பித்தார். இதனால் 11 ஓவர்கள் முடிவில் அவர் அரைசதம் தொட்டார். அதோடு இந்திய அணியும் இலக்கை எட்டி ஆசிய கோப்பை இறுதி தகுதி பெற்றது.

ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும், ஷெபாலி வர்மா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கையும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஜூலை 28-ம் தேதி நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE