“கம்பீர் உடன் நல்ல புரிதல் உள்ளது” - இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடன் சிறந்த புரிதல் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

“பல்வேறு கேப்டன்களிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுள்ளேன். கேப்டனாக செயல்பட அந்த அனுபவம் கைகொடுக்கும். இது பெரிய பொறுப்பும் கூட. கம்பீர் தலைமையில் கடந்த 2014-ல் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி உள்ளேன். அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

ஏனெனில், அங்கிருந்து தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. எங்களது உறவு அப்படியே இன்னும் வலுவாக உள்ளது. நான் எப்படி பணியாற்றுவேன் என்பதை அவர் அறிவார். பயிற்சியின்போது எனது மைண்ட் செட் என்ன என்பது குறித்தும் அறிவார். அவர் குறித்தும் நான் அறிவேன்.

எங்களது இந்தப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். இங்கு அடக்கம் மிகவும் அவசியம். ஆட்டத்தில் சிறந்து விளங்கினாலும், மோசமாக ஆடினாலும் அது அவசியம்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 68 டி20 போட்டிகளில் ஆடி 2,340 ரன்கள் எடுத்துள்ளார். பயிற்சியாளர் கம்பீருக்கும் இதுவே முதல் தொடராக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE