ஹர்திக் பாண்டியா குறித்து பும்ரா ஓபன் டாக்!

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த மே மாதம் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி இருந்தார். அப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். மைதானத்தில் அவரை ரசிகர்கள் இகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது அது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

“ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த புரிதல் எங்களுக்கு நிச்சயம் உள்ளது. அதே போல வீரர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது நிச்சயம் அது வீரர்களை பாதிக்கும். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நிறுத்தவும் முடியாது.

அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் மீது நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். இதை சொல்வது எளிது. செய்வது கடினம். ஏனெனில், களத்தில் ரசிகர்கள் எழுப்பும் விமர்சனங்கள் உங்களுக்கு கேட்கும். அந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் ஒரு அணியாக அவருக்கு ஆதரவாக நின்றோம். அவருடன் பேசினோம். நிச்சயம் அது கடினமான சூழல்.

ஆனால், நாங்கள் டி20 உலகக் கோப்பை வென்றதும் அது அனைத்தும் மாறியது. அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போது அனைவரும் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால், இதன் மூலம் இவை அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் எண்ண முடியாது. நாளை நாங்கள் தோல்வியை தழுவும் போது இந்த நிலை மாறும்.

இது விளையாட்டு வீரரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பகுதி. இதை அனைவரும் கடந்து வருகிறோம். நாங்கள் பிரபலமான விளையாட்டில் அங்கம் வகிக்கிறோம். கால்பந்து உலகில் நட்சத்திர வீரரை கூட ரசிகர்கள் இகழ்ந்தது உண்டு. நாங்கள் எங்கள் ஆட்டத்தில் சிறந்து விளங்க விரும்புகிறோம். இந்த பயணத்தில் இது மாதிரியான சவால்கள் நிச்சயம் வரும். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்” என பும்ரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE