ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி

By செய்திப்பிரிவு

பாரிஸ்: நடப்பு ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் இந்தியா மூன்றாம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி ஆனது.

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை ரேங்கிங் சுற்று நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவாரா 681 புள்ளிகளை பெற்று நான்காம் இடம் பிடித்தார். தருண்தீப் ராய் 674 புள்ளிகளுடன் 14-ம் இடம் பிடித்தார். பிரவீன் ஜாதவ் 658 புள்ளிகளுடன் 39-ம் இடம் பிடித்தார்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 2013 புள்ளிகளை இந்தியா பெற்றது. ஆடவர் பிரிவில் கொரியா மற்றும் பிரான்ஸ் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. சீனா நான்காம் இடம் பிடித்தது. தகுதி சுற்றில் இந்தியாவின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பயிற்சியாளர் சோனம் பூட்டியா தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் வில்வித்தை அணியினர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடவர் அணியினர் அம்பை எய்திய போது காற்று வீசியதாக சோனம் தெரிவித்தார். அந்த சவாலை திறம்பட சமாளித்து மூன்றாம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறி இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE