பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். (மொத்தம் 117 பேர் கொண்ட அணியில் 5 பேர் மாற்று வீரர்கள்.)

வழக்கமாக, ஒலிம்பிக் போட்டிக்காக தனி நகரமே உருவாக்கி, புதிதாக மைதானங்கள் கட்டப்படும். ஆனால், பாரிஸில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. புதிய கட்டுமானங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக, திறந்தவெளியில் தொடக்க விழா நடக்க உள்ளது. வீரர்கள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி, சீன் நதியில் படகில் 6 கி.மீ. தூரம் அணிவகுத்து செல்ல உள்ளனர். தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளன. அங்கு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் முறைப்படி தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE