பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற அங்கிதா பகத் 11, பஜன் கவுர் 22 மற்றும் தீபிகா குமாரி 23-வது இடத்தை பிடித்தனர். புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மொத்தம் இரண்டு பாதிகளாக தனிநபர் ரேங்கிங் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் 72 முறை அம்புகளை எய்தனர். ஒரு செட்டுக்கு ஆறு முறை அம்புகளை எய்தனர். ஆறு செட்களை கொண்டது ஒரு பாதி. இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்பட்டது. அதன்படி மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 ஸ்கோருடன் 11-ம் இடம் பிடித்தார், பஜன் கவுர் 659 ஸ்கோருடன் 22-ம் இடம் பிடித்தார், தீபிகா குமாரி 658 ஸ்கோருடன் 23-ம் இடம் பிடித்தார்.

வில்வித்தையில் தனிநபர் ஆட்டம் ரவுண்ட் ஆஃப் 64/32 சுற்று வரும் 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதேபோல மகளிர் அணிக்கான நாக்-அவுட் போட்டி 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-ல் விளையாடும்.

அந்த வகையில் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி மொத்தமாக பெற்ற 1983 புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்து, நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை மகளிர் பிரிவில் பிடித்தன. இன்று மாலை ஆடவர் தனிபர் ரேங்கிங் சுற்று நடைபெறுகிறது.

லிம் சி-ஹியோன்: மகளிர் தனிநபர் பிரிவில் கொரியாவின் லிம் சி-ஹியோன் 694 ஸ்கோருடன் முதல் இடத்தை பிடித்தார். இது உலக சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 72 முறை அம்புகளை அம்புகளை எய்தும் ரேங்கிங் சுற்றில் கொரியாவின் அன் சான் 692 ஸ்கோர் எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை சி-ஹியோன் முறியடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE