பார்வையாளர்கள் ரகளை: அர்ஜென்டினாவை வீழ்த்திய மொராக்கோ | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

செயிண்ட் எட்டியன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகள் நேற்று (ஜூலை 24) தொடங்கின. இதில் குரூப் சுற்று போட்டியில் உலக சாம்பியன் அர்ஜென்டினாவை மொராக்கோ அணி வீழ்த்தியது. அதோடு இந்தப் போட்டியின் போது பார்வையாளர்கள் ரகளையில் ஈடுபட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் தொடங்கியது. அதோடு அர்ஜென்டினா பதிவு செய்த இரண்டாவது கோல் ஆஃப்-சைட் என அறிவிக்கப்பட்டது. இப்படி பாரிஸ் ஒலிம்பிக்கின் விளையாட்டு நிகழ்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அரங்கேறி உள்ளது.

செயிண்ட் எட்டியனில் உள்ள ஜெஃப்ராய் குய்ச்சார்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தில் 90 நிமிடங்கள் முடிந்த போது 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றிருந்தது. கூடுதலாக 16 நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைம் கொடுக்கப்பட்டது. அதில் கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெடினா கோல் பதிவு செய்தார். அப்போது ஆட்ட களத்துக்குள் பார்வையாளர்கள் சிலர் அத்துமீறி உள் நுழைந்ததாக தகவல். மேலும், காலியான தண்ணீர் கேன்களை வீசி இருந்தனர். இதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டனர். ஆட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படாத காரணத்தால் சுமார் 75 நிமிடங்கள் சென்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. அப்போது அர்ஜென்டினா பதிவு செய்த இரண்டாவது கோல் ஆஃப்-சைட் என விஏஆர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடுவர் அறிவித்தார். அதனால் அந்த அணியின் இரண்டாவது கோல் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து மொராக்கோ 2-1 என வெற்றி பெற்றது.

இது கால்பந்து உலகில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இது குறித்து மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜேவியர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE