சால்ட் லேக் சிட்டியில் 2034-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் 2034-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஏசி) அறிவித்துள்ளது.

தற்போது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பாரிஸிலும், 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2034-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு அமெரிக்காவின் உடா மாகாணத்திலுள்ள சால்ட் லேக் சிட்டி (எஸ்எல்சி) நகரம் விண்ணப்பித்து இருந்தது.

இதையடுத்து இதற்கான அனுமதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, நேற்று வழங்கியது. இதைத் தொடர்ந்து சால்ட் லேக் சிட்டி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தங்களது நகரம் தேர்வு செய்யபட்டதை நேற்று காலை 11 மணிக்கு கொண்டாடினர்.

முன்னதாக 2034-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு சால்ட் லேக் சிட்டி மட்டுமே விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் மற்றும் அதிக அளவு செலவினம் போன்ற காரணங்களால் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த பல்வேறு நகரங்கள் முன்வரவில்லை.

இதுகுறித்து ஒலிம்பிக் விளையாட்டு செயல் இயக்குநர் கிறிஸ்டோப் துபி கூறும்போது, “குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முக்கியமான நகரமாக சால்ட் லேக் சிட்டி உள்ளது. இறுதியாக போட்டியை நடத்துவதற்கு அந்த நகரமே தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

உடா மாகாண ஆளுநர் ஸ்பென்ஸர் காக்ஸ் கூறும்போது, “குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த சால்ட் லேக் சிட்டி தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் வட அமெரிக்காவின் குளிர்கால விளையாட்டின் தலைநகரமாக உடா மாகாணத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE