‘ஒரே நாளில் 600 ரன்கள் குவிப்போம்!’ - ஆலி போப் எச்சரிக்கை

By ஆர்.முத்துக்குமார்

நிச்சயம் ஒருநாள் தங்கள் அணி ஒரே நாளில் டெஸ்ட் போட்டியில் 600 ரன்களை குவிக்கும் என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆலி போப் தெரிவித்துள்ளார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் சூளுரைத்துள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் உருவாகியுள்ள ‘பாஸ்பால்’ அதிரடி பேட்டிங் முறையை இங்கிலாந்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக அந்த பாச்சா பலிக்கவில்லை தொடரை பெரிய மார்ஜினில் இழந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகுதியளவில் கைகொடுத்த பாஸ்பால் அணுகுமுறையால் ஆஷஸ் தொடரை 2-2 என்று ட்ரா செய்தனர். உண்மையில் மரபான டெஸ்ட் தொடரை ஆடியிருந்தால் இங்கிலாந்து கடந்த ஆஷஸ் தொடரை 3-2 என்று கைப்பற்றி இருக்கலாம். எந்த விதத்தில் பாஸ்பால் ‘சக்சஸ்’ என்று போப் கூறுகிறார் என்று தெரியவில்லை.

மரபான கிரிக்கெட் என்ற ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த திறமைகளை பிரெண்டன் மெக்கல்லம் தட்டி எழுப்பியுள்ளார் என்பதைத் தவிர பாஸ்பால் அணுகுமுறையினால் இவர்களால் இந்தியாவை வெல்ல முடியவில்லை, ஆஸ்திரேலியாவை வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில், ஆலி போப் கூறும்போது, “சில சமயங்களில் 280 முதல் 300 ரன்களை ஒரே நாளில் எடுப்போம் அது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடியதால் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களையும் வரும் நாட்களில் எடுப்போம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

ரன்களுக்கான பேரவா இருக்கவே செய்கிறது. ஆம், எப்போதும் ரன் பசி இருக்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும்.

இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம். ” என்றார் ஆலி போப்.

ஆனால், இப்படியெல்லாம் தங்களைப் பற்றியே உயர்வாகக் கூறிக்கொள்ளும் இங்கிலாந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் கடைசி இடத்தில் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், இது அவர்கள் தேசிய விளையாட்டு. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நமக்கென்ன கவலை?

டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பாஸ்பால் உத்திக்குப் பிறகே 8 முடிவடைந்த இன்னிங்ஸ்களில் ஓவருக்கு 5 ரன் விகிதத்தில் எடுத்த ஒரே அணி இங்கிலாந்துதான். ராவல்பிண்டியில் பாகிஸ்தான் பவுலிங்கைப் புரட்டி எடுத்து ஒரே நாளில் 506 ரன்களை விளாசித்தள்ளினர். 101 ஓவர்களில் 657 ரன்களைக் குவித்தனர். 6.50 என்ற ரன் ரேட் உலக சாதனையை படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE