“ஸ்ரீஜேஷுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம்” - இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு ஓய்வு பெற உள்ள இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்காக பதக்கம் வெல்ல விரும்புவதாக ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இது தங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாரிஸ் ஒலிம்பிக் எங்களுக்கு முக்கியமான தொடர். இது எங்களுக்கு சிறப்பானதாக அமையும். இந்த தொடரை இந்திய ஹாக்கியின் ஜாம்பவான்களில் ஒருவரான பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவர் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறார்.

2016 ஜூனியர் உலகக் கோப்பையில் நாங்கள் பட்டம் வென்ற போது அவரது ஆலோசனைகள் உதவியது. அதை நான் இன்னும் மறக்கவில்லை. நிச்சயம் அவருக்காக நாங்கள் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம்” என கேப்டன் ஹர்மன்ப்ரீத் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அறிவித்துள்ளார். 36 வயதான அவர் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் பெருஞ்சுவர் என போற்றப்படுகிறார். ஒலிம்பிக், ஹாக்கி உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் என பல்வேறு தொடர்களில் பதக்கம் வென்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வரும் 27-ம் தேதி அன்று இந்திய ஹாக்கி அணி, தனது முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE