டென்னிஸில் சாதிக்குமா போபண்ணா - பாலாஜி ஜோடி? | பாரிஸ் ஒலிம்பிக்

By பெ.மாரிமுத்து

பெரும்பாலும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக திகழும் டென்னிஸ் ஒலிம்பிக்கில் கவனிக்கப்படக்கூடிய போட்டிகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் டென்னிஸ் வரலாற்றில் கிரேட் பிரிட்டன் 43பதக்கங்களை வென்று வெற்றிகரமான நாடாக உள்ளது. இதில் 17 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கம் அடங்கும். இதற்கு அடுத்தபடியாக 39 பதக்கங்களை வென்று அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. எனினும் இந்த விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற சாதனை அமெரிக்காவின் வசமே உள்ளது. ஒலிம்பிக் டென்னிஸில் அமெரிக்கா 21 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

1988-ம் ஆண்டில் இருந்துதான் ஒலிம்பிக்கில் டென்னிஸ் முழு பதக்க விளையாட்டாக நிரந்தரமாக இடம் பெறத் தொடங்கியது. டென்னிஸ் 1896-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகமானது. ஆனால் அமெச்சூர் வீரர்களின் வரையறை தொடர்பாகசர்வதேச புல்வெளி டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றுக்கு இடையிலான சர்ச்சை காரணமாக 1924-ம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கிலிருந்து டென்னிஸ் திரும்பப் பெறப்பட்டது.

இதன் பின்னர் 1968-ம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக்கிலும், 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் டென்னிஸ் விளையாட்டு சேர்க்கப்பட்டது. ஆனால் 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் வரை போட்டிக்கு முன்னர் வரை டென்னிஸ் ஒரு முழு பதக்க விளையாட்டாகஇடம்பெறவில்லை. ஒலிம்பிக் டென்னிஸில் புகழ் பெற்றவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கப் பதக்கம்வென்றுள்ளனர். இதில் ஸ்பெயினின் ரபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் அடங்குவர்.

ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியாவில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போதிலும் 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ்வெண்கலம் வென்றதே இதுவரை சிறந்த செயல் திறனாக உள்ளது. 2004-ம் ஆண்டு ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி அரை இறுதியில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் களமிறங்குகிறார். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி களமிறங்க உள்ளது. இது குறித்த ஓர் பார்வை...

சுமித் நாகல்: டென்னிஸ் உலகத் தரவரிசை பட்டியலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 77-வதுஇடத்தை பிடித்ததன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் சுமித் நாகல். கடந்த ஓராண்டு காலமாக சுமித் நாகல் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாகல் தனது செயல்திறன் காரணமாக தரவரிசையில் பெரும் பாய்ச்சலை எடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஏடிபி தரவரிசையில் 138-வதுஇடத்தில் இருந்தார். ஆனால் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசையில் அவர், 68-வது இடத்தில் இருந்தார். சுமித் நாகல்சென்னை சேலஞ்சர், ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் ஆகியவற்றை வென்று அசத்தினார். பெருஜியா நகரில்நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் போதிலும் சுமித் நாகல் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.

போபண்ணா-பாலாஜி ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த ரோகன் போபண்ணா, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து களமிறங்குகிறார். ரோகன் போபண்ணா, தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் ஸ்ரீராம் பாலாஜி 67-வது இடம் வகிக்கிறார். 43 வயதான ரோகன் போபண்ணா கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் மேத்யூ எப்டனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன் மூலம் உலகத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், தற்போது 3-வது முறையாக களமிறங்குகிறார்.

போபண்ணா ஏடிபி டூரில் 26 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். இந்த அவரது அனுபவம் பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் உலகின் முன்னணி வீரர்கள் சிலர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளனர். இது ரோகன் போண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடிக்கு சவால்களை கடினமாக்கக்கூடும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்