பாரிஸ் ஒலிம்பிக்: பதக்க மேடையை மீண்டும் அலங்கரிப்பாரா மீராபாய் சானு?

By செய்திப்பிரிவு

வீரர்களின் உடல் வலிமை மற்றும் மன உறுதியின் வெளிப்பாடாக திகழும் பளுதூக்குதல் விளையாட்டு 1896-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமானது. 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிருக்கான பிரிவு சேர்க்கப்பட்டது. ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் கிரீஸ் வீரர் பைரோஸ் டிமாஸ் 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1992 முதல் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை அவர் முறையே 82.5, 83, 85 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்றார். மற்றொரு கிரீஸ் வீரரான அகாகியோஸ் காகியாஸ்விலிஸ் மற்றும் துருக்கியின் ஹலில் முட்லு, நயீம் சுலைமானோக்லு ஆகியோரும் தலா மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் சீனாவின் சென் யான்கிங் (58 கிலோ), தென் கொரியாவின் சூ ஷு-சிங் (53 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக்கில் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மீராபாய் சானு: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு 49 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார். பதக்கம் வெல்லக்கூடியவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் 3-வது முறையாக களமிறங்கும் அவர், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப் பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் கர்ணம் மல்லேஷ்வரிக்கு பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார்.

மீராபாய் சானு பதக்கம் வெல்லும் போட்டியாளராக கருதப்பட்டாலும், காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான தகுதி போட்டி மற்றும் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் மீராபாய் சானு 12-வது இடத்தையே பிடித்தார். மேலும் முதலிடத்தைப் பிடித்த வீராங்கனைகளால் தூக்கப்பட்ட எடையை விட மிகக் குறைவாக தூக்கியிருந்தார் மீராபாய் சானு. இதனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அவருக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE