இந்திய அணியுடனான ஆட்டம்: நேபாள வீராங்கனைகள் ஆர்வம் | மகளிர் ஆசிய கோப்பை

By செய்திப்பிரிவு

தம்புலா: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் விளையாட உள்ளன. இந்திய அணியுடனான இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக நேபாள கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்ப்போம்.

“இது எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இங்கு இந்தியா மாதிரியான அணியுடன் விளையாடி நாங்கள் எங்களது திறன்களை உலகுக்கு வெளிப்படுத்த முடியும். இந்திய அணியுடன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் போட்டியில் நிச்சயம் அவர்களுக்கு நாங்கள் சவால் கொடுப்போம்” என நேபாள மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் இந்து தெரிவித்துள்ளார்.

“இந்த ஆட்டத்தில் எங்களது அணுகுமுறை சிம்பிளாக இருக்கும். இந்திய பவுலர்கள் மற்றும் பேட்டர்களின் வீடியோவை பார்த்தேன். அதற்கு தகுந்த வகையில் என்னை தயார் செய்து கொண்டுள்ளேன். நான் பயிற்சியில் கற்றதை ஆட்டத்தில் செயல்படுத்த விரும்புகிறேன். இந்தியாவுடனான இந்தப் போட்டி எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகும். அணியின் சீனியர் வீராங்கனை என்ற முறையில் எனது சிறந்த ஆட்டத்தை இதில் வெளிப்படுத்தியாகி வேண்டும்” என நேபாள அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் ருபினா சேத்ரி தெரிவித்துள்ளார்.

“உலகின் சிறந்த அணியை எதிர்கொள்வதில் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் உள்ளோம். ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருகிறார். அவரது ஆட்டம் குறித்து அவருடன் பேச உள்ளேன்” என நேபாள வீராங்கனை சீதா தெரிவித்துள்ளார். 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் இந்திய அணி ‘குரூப் - ஏ’ பிரிவில் உள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இன்று நேபாள அணியுடன் விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE