“கோப்பையை திராவிட் ஏந்திய தருணம் உணர்வுபூர்வமானது” - அஸ்வின் பகிர்வு

By செய்திப்பிரிவு

கோவை: வெற்றிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை ராகுல் திராவிட் கையில் ஏந்திய அந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை தனது யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின், தற்போது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் வீடியோ தொகுப்பை தற்போது வழங்கி வருகிறார்.

பல்வேறு ஊர்களுக்கு பயணித்து, அதன் ஊடாக சுவாரஸ்யமான விஷயங்களை அஸ்வின் பதிவு செய்து வருகிறார். இதில் அவருடன் அந்த ஊரை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் பயணிக்கின்றனர். அந்த ஊரின் ஸ்பெஷல் உணவை ருசித்தபடி கிரிக்கெட் சார்ந்து அஸ்வின் பேசுகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தான் திராவிட் குறித்து பேசியுள்ளார்.

“டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை சிறப்பாக வீசி இருந்தார். சூர்யகுமார் யாதவ் அற்புத கேட்ச் பிடித்திருந்தார். ஆனாலும் எனக்கான சிறந்த தருணம் என்றால் விராட் கோலி, ராகுல் திராவிடை அழைத்து கோப்பையை கொடுப்பார் அதை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டு திராவிட் கத்தி அழுத அந்த தருணம் உணர்வுபூர்வமானது” என அஸ்வின் அதில் தெரிவித்துள்ளார். அது இப்போது பரவலாக கவனம் பெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டி வர்ணனை குறித்து பேசிய போது அஸ்வின் இதை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE