பாரிஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி?

By பெ.மாரிமுத்து

1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அறிமுகமானது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இடம் பெற்றது. இதன் பின்னர் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவு கைவிடப்பட்டு அணிகள் போட்டியாக மாற்றப்பட்டது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை சீனா 60 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.

அதேவேளையில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை. எனினும் முதன்முறையாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் அணிகள் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, ஜா அகுலா ஆகியோரும் விளையாட உள்ளனர். இவர்களுடன் அணிகள் பிரிவில் மானவ் தாக்கர், அர்ச்சனா காமத் ஆகியோர் களமிறங்குகின்றனர். இது குறித்து ஒரு பார்வை...

சரத் கமல்: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள சரத் கமல், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார். 5-வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ள அவர், இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர்ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் களமிறங்குகிறார். இந்த ஆண்டு பங்கேற்ற போட்டிகளில் 54 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளார் சரத்கமல். அதிகபட்சமாக சிங்கப்பூர் போட்டியில் கால் இறுதிசுற்றுவரை கால்பதித்திருந்தார். இம்முறை அணிகள்பிரிவில் அவர், கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். சரத் கமலின் சமீபத்திய பார்மும், அனுபவமும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஹர்மீத் தேசாய்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் மற்றொரு இந்திய வீரரான ஹர்மீத் தேசாய் உலகத் தரவரிசையில் 71-வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தொடர்களில் ஹர்மீத் தேசாய் 2-வது சுற்றுடன் வெளியேறியிருந்தார். எனினும் குரோஷியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி ஃபீடர் வராசாடின் தொடரில் கால் இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் உலகின் தலைசிறந்த டேபிள் டென்னிஸ் வீரர்கள் பங்கேற்பதால், ஹர்மீத் தேசாய் தொடக்க சுற்றிலேயே கடும் சவால்களை சந்திக்கக்கூடும்.

மணிகா பத்ரா: உலகத் தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள மணிகா பத்ரா, மகளிர் ஒற்றையர் மற்றும் அணிகள்பிரிவில் களமிறங்குகிறார். இந்த ஆண்டில் சவுதிஅரேபியாவில் நடைபெற்ற தொடரில் கால் இறுதி சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார். இதை தவிர்த்த மற்ற தொடர்களில் அவர், எந்தவிததாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒலிம்பிக்கில் 3-வது முறையாக களமிறங்குகிறார் மணிகா பத்ரா. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெளியேறிய அவர், 2020-ம்ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 2-வது சுற்றுவரை முன்னேறினார். இம்முறை தனது அனுபவத்தால் சிறப்பாக செயல்படுவதில் மணிகா பத்ரா முனைப்பு காட்டக்கூடும்.

ஸ்ரீஜா அகுலா: ஸ்ரீஜா அகுலா, பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர்ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் களமிறங்குகிறார். வளர்ந்து வரும் வீராங்கனையான அவர்,இந்த ஆண்டில் உலகத் தரவரிசையில் மணிகா பத்ராவை பின்னுக்குத் தள்ளி 25-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாகவும் உருவெடுத்தார். இந்த சீசனில் அவர், 66 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளார். டபிள்யூடிடி ஃபீடர் பெய்ரூட் II, டபிள்யூடிடி ஃபீடர் கார்பஸ் கிறிஸ்டி மற்றும் டபிள்யூடிடி கன்டெண்டர் லாகோஸ் ஆகியவற்றையும் வென்று அசத்தினார் ஜா அகுலா. அவர், சிறந்த பார்மில் இருப்பதால் பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்று வரை முன்னேறலாம் அல்லது வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE