குத்துச்சண்டை விளையாட்டு 1904-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு ஓர் அங்கமாக உள்ளது. விதிவிலக்காக ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் குத்துச்சண்டை இடம் பெறவில்லை. ஏனெனில் ஸ்வீடன் சட்டம் குத்துச்சண்டையை தடை செய்யப்பட்ட விளையாட்டாக அறிவித்திருந்தது.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை அறிமுகமானது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 13 எடைப் பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. ஆடவர் குத்துச்சண்டையில் ஏழு எடை பிரிவுகளிலும், மகளிர் குத்துச்சண்டையில் ஆறு எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் அமெரிக்கா 50 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 117 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. கியூபா 78 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 62 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா குத்துச்சண்டையில் இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் 51 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் பின்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதையடுத்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் லோவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 4 வீராங்கனைகள், 2 வீரர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து ஒரு பார்வை...
» ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் மத உணர்வை புண்படுத்துவதாகக் கூறி பிரபாஸ், அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்
» அரவக்குறிச்சி அருகே கார் விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி
லோவ்லினா போர்கோஹெய்ன்: மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் லோவ்லினா போர்கோஹெய்ன். அனுபவம் வாய்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான அவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மேலும் உலக சாம்பியன்ஷிப்பில் 3 முறை பட்டம் வென்றுள்ள லோவ்லினா குத்துச்சண்டை உலகில் பிரபலமான பெயராக மாறியுள்ளார்.
இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர், பதக்கத்தின் நிறத்தை மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படக்கூடும். கடந்த முறை 69 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற லோவ்லினா இம்முறை 75 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார். இந்த ஆண்டு செக் குடியரசில் நடைபெற்ற கிராண்ட் பிரி போட்டியில் வெள்ளி வென்ற லோவ்லினா உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.
முந்தைய ஒலிம்பிக் போட்டியுடன் ஒப்பிடும்போது அதிக எடை பிரிவில் போட்டியிடுவதால் லோவ்லினாவுக்கு சவால் மிகப் பெரியதாக இருக்கும். எனினும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அவர், பதக்கம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜாஸ்மின் லம்போரியா: மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் ஜாஸ்மின் லம்போரியா. ஜாஸ்மின் லம்போரியா தொடக்கத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான களத்தில் இல்லை. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த பர்வீன் ஹூடாவை உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) இடைநீக்கம் செய்தது.
இதனால் ஒலிம்பிக்கில் முதல் முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு ஜாஸ்மின் லம்போரியாவுக்கு உருவானது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை தகுதிச் சுற்றின் காலிறுதியில் மாலி வீராங்கனையான மரைன் கமாராவை வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஜாஸ்மின். உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில்
உள்ள ஜாஸ்மின், பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு கடினம் என்றே கருதப்படுகிறது.
அமித் பங்கல்: ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் அமித் பங்கல். பாங்காக்கில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை தகுதிச் சுற்று மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கல். அந்தத் தொடரில் அவர், 5-0 என்ற கணக்கில் சீனாவின் லியு சுவாங்கை தோற்கடித்தார்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (பி.எஃப்.ஐ) மதிப்பீட்டு முறை காரணமாக இந்திய குத்துச்சண்டை அணியில் தனது இடத்தை இழந்த அமித் பங்கல், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
அமித் பங்கல் டோக்கியோ ஒலிம்பிக்குக்குப் பிறகு 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், ஸ்ட்ராண்ட்ஜா நினைவு போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் சக்தி வாய்ந்த செயல் திறனை அமித் பங்கல் வெளிப்படுத்தும்பட்சத்தில் அது அவரை பதக்கம் வெல்லும் போட்டியாளராக மாற்றக்கூடும்.
ப்ரீத்தி பவார்: மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் ப்ரீத்தி பவார். ஆசிய விளையாட்டு போட்டியின் குத்துச்சண்டை காலிறுதியில் கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து அரையிறுதியில், சீனாவின் யுவான் சாங்கிடம் ப்ரீத்தி தோல்வி அடைந்து வெண்கலம் பெற்றிருந்தார். தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ளார்.
நிஷாந்த் தேவ்: ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் நிஷாந்த் தேவ். பாங்காக்கில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியின் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நிஷாந்த் தேவ்.
தகுதி சுற்று போட்டியில் நிஷாந்த் தேவ் 5-0 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் வாசில் செபோடரியை தோற்கடித்தார். உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள நிஷாந்த் தேவ் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். நிஷாந்த் 2023-ம் ஆண்டு நடைபெற்ற குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
நிகத் ஜரீன்: 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் நிகத் ஜரீன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிகத் ஜரீன் அரை இறுதி சுற்றில் தாய்லாந்தின் ரக்சாத் சுதாமட்டுவிடம் தோல்வி அடைந்தார்.
எனினும் அரை இறுதி வரை அவர், முன்னேறியிருந்தது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு போதுமானதாக இருந்தது. நிகத் ஜரீன் காயங்களால் அவதிப்பட்ட போதிலும் அவற்றை சமாளித்து உலக சாம்பியன்ஷிப்பில் 2022, 2023-ம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். நிகத் ஜரீன் சிறந்த பார்மில் உள்ளதால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago