அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: திருமண வதந்திக்கு ஷமி பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்று சானியா மிர்சா உடனான திருமண வதந்தி குறித்த செய்திகளுக்கு முகம்மது ஷமி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து முகம்மது ஷமி , “சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதுமாதிரியான அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களைப் பரப்பக்கூடாது. இந்தச் செய்தி மிகவும் விஷமத்தனமானது. யாரோ வேண்டுமென்றே இதைப் பரப்பியுள்ளனர் என நினைக்கிறேன்.

இப்படி பொய்யான செய்தியை பரப்பினால், நான் என்ன செய்வது?. என்னுடைய செல்போனை திறந்தாலே இந்த செய்திகளே. பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். மீம்ஸ் என்பது அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே ஒருவர் வாழ்க்கையைக் கெடுக்கும் என்றால் நிச்சயம் அதைப்பற்றி யோசிக்க வேண்டும்

அதிகாரபூர்வமற்ற பக்கங்களில் இருந்து இதுபோன்ற செய்திகள் பரப்பும் அந்த நபர்கள், வதந்தியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து செய்தியைப் பதிவிடுங்கள். அப்படிச் செய்யும்பட்சத்தில் நிச்சயம் அதற்கு நான் பதில் அளிப்பேன்.” எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து சோயிப் மாலிக் மூன்றாவது திருமணமும் செய்துகொள்ள, சானியா மிர்சா திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபோல் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியும் அவரது மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் எழ, அதனை அப்போதே கடுமையாக கண்டித்தார் சானியா மிர்சாவின் தந்தை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE