ஜூலை முதல் மீண்டும் ஆக்ஷன்: வார்னர், பான்கிராப்ட் கிரிக்கெட் விளையாட அனுமதி

By ஏஎஃப்பி

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி, தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதம் முதல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முறைப்படியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வார்னர், பான்கிராப்ட்  ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய வடக்கு மண்டலத்தில் நடைபெறும் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தது. அப்போது கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள்.

இதில் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு 12 மாதங்கள் விளையாடத் தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாடத் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு உத்தரவிட்டது. மேலும், உள்நாட்டு போட்டிகளிலும் விளையாட அனுமதி அளிக்கவில்லை.

இதனால், 3 பேரும், தங்கள் பிராந்தியத்துக்கு உட்பட்ட குறைந்த மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று பயிற்சி செய்து வந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்துவரும் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு ஸ்மித் சென்றுள்ளார்.

இந்நிலையில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட டேவிட் வார்னர், பான்கிராப்ட்டுக்கு ஆஸ்திரேலிய வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் நடக்கும் கீழ்மட்ட அளவிலான, அதேசமயம் அங்கீகாரம் பெற்ற டி20, ஒருநாள் போட்டிகளில் இருவரும் பங்கேற்கிறார்கள்.

ஆஸ்திரேலிய வாரியம் விதிக்கப்பட்ட தடைக்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் இருவரும் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலிய வடக்கு பிராந்தியத்தில், டார்வின் நகரில் டி20, ஒருநாள் போட்டிகள் ஒருமாதம் நடக்க இருக்கின்றன. இதில் டெசர்ட் பிளேஸ், சிட்டி சைக்ளோன்ஸ், நார்த்தன் டைட், சதர்ன் ஸ்டார்ம் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின்றன. இதில் வார்னர், பான்கிராப்ட் விளையாடுகின்றனர்.

இதில் பான்கிராப்ட் ஒருமாதம் முழுவதும் விளையாடுவதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால், ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கும் போட்டிகளில் மட்டும் விளையாட வார்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து வடக்கு பிராந்திய கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜோயல் மோரிஸன் கூறுகையில், ''கேமரூன் பான்கிராப்ட், டேவிட் வார்னர் இருவரும் எங்களின் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறோம். இவர்களின் அனுபவமான ஆட்டம் உள்நாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே செப்டம்பர் மாதத்தில் இருந்து சிட்னி கிளப் அணியில் இணைந்து வார்னர் விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் உள்நாட்டு வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்களும் இந்த அணியில் இணைந்து விளையாடுவார்கள். இந்தப் போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த 3 பேரும், மெல்ல மெல்ல சர்வதேச கிரிக்கெட் நீரோட்டத்துக்கு திரும்பி வருகிறார்கள் என்பதும், அதற்கான முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்