“இம்முறை என் மீது அழுத்தம் அதிகம்” - பாரிஸ் ஒலிம்பிக் குறித்து நீரஜ் சோப்ரா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் இந்த முறை தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்படையாக தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.

“இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனெனில், பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழலில் உள்ளேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு நான் தங்கம் வென்றிருந்தேன். அதனால் மீண்டும் நான் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற அழுத்தம் இருந்தது.

ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை நாம் ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதனை மறுக்க முடியாது. கடந்த முறையை காட்டிலும் அது அதிகமாக உள்ளது. நிச்சயம் இது இம்முறை அழுத்தத்தை அதிகரித்துள்ளது” என நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா: ஆடவருக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தற்போது உலக சாம்பியனாகவும் உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர், பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார். 26 வயதான அவர், இம்முறையும் பதக்கம் வெல்லக்கூடிய இந்திய வீரர்களில் முக்கியமானவராக திகழ்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு 2022-ம் ஆண்டு டைமண்ட் லீக்கில் தங்கப் பதக்கம், ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா.

உலக சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில் 2022-ம் ஆண்டு யூஜின் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார். கடைசியாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 2022-ம் ஆண்டு பின்லாந்தின் துர்குவில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் நீளம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்வீடனில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்தார். 2023-ம் ஆண்டு மே மாதம் முதன் முறையாக உலக தடகள அமைப்பு வெளியிட்ட ஈட்டி எறிதல் தரவரிசையில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தற்போது ஜெர்மனியில் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டுள்ள அவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் என 29 பேர் களமிறங்குகின்றனர். எப்போதும் போல் இல்லாமல் இம்முறை தடகள அணி போலந்து, துருக்கி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE