இங்கிலாந்தின் ஆணவத்தை அடக்கிய மே.இ.தீவுகளின் அதனேஸ், ஹாட்ஜ்

By ஆர்.முத்துக்குமார்

மே.இ.தீவுகள் அணிக்கு உரிய மதிப்பை அளிக்காமல் ஆஷஸ் தொடருக்கான சோதனைக்கூடமாக மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கையாளும் இங்கிலாந்துக்கு நேற்று மே.இ.தீவுகள் பிரமாதமாக ஆடி பென் ஸ்டோக்சின் உத்திகளுக்குத் தண்ணி காட்டினார்கள்.

நேற்றைய ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கும் பென் ஸ்டோக்ஸுக்கும் காயமேற்படுத்தியது மே.இ.தீவுகளின் பதிலடி மட்டுமல்ல, மே.இ.தீவுகளின் ரன் ரேட்டும் தான். ஓவருக்கு 4.17 என்ற விகிதத்தில் ரன்களை அடித்து வருகின்றனர் மே.இ.தீவுகள். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும் மறு முனையில் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டாசில்வா அதிரடி முறையில் 7 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 32 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

முன்னதாக பிராத்வெய்ட் 42 ரன்களை எடுக்க, டொமினிகா வீரர்களான அலிக் அதனேஸ் மற்றும் காவெம் ஹாட்ஜ் ஆகியோர் இணைந்து 175 ரன்கள் கூட்டணியை 37 ஓவர்களில் அமைத்தனர். இதில் அதனேஸ் 90 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 82 ரன்களை விளாச, காவெம் ஹாட்ஜ் 171 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 84/3 என்ற நிலையிலிருந்து மே.இ.தீவுகள் ஸ்கோரை 259 ரன்களுக்கு உயர்த்தினர்.

பந்து வீச்சில் இங்கிலாந்தின் பெரிய பெரிய ஆபீசர்களுக்கெல்லாம் அடி. கடந்த போட்டியில் லார்ட்சில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இந்த முறை 16.5 ஓவர்களில் 77 ரன்கள் விளாசப்பட்டார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 ஓவர்களில் 61 ரன்கள் விளாசப்பட்டார். உயர ஸ்பின்னர் ஷோயப் பஷீர் 23 ஓவர்களில் 100 ரன்களைக் கொடுத்து பவுலிங்கில் சதம் அடித்தார்.

சதமெடுத்த ஹாட்ஜ் தன் 4வது டெஸ்ட் போட்டியில்தான் ஆடுகிறார். அதான்சே 6வது டெஸ்ட்டில் ஆடுகிறார். ஹாட்ஜ் மே.இ.தீவுகளுக்காக சதம் எடுக்கும் 2வது வீரர் ஆவார். கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறிய போது உண்மையில் ஹாட்ஜ் விரக்தியடைந்தார். அதுவும் ரிவியூவில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அடித்து நொறுக்கும் போது உற்சாகமாக கிரேட் ஷாட், கிரேட் டைமிங் என்று கத்திக் கதறிய வர்ணனையாளர் நாசர் ஹுசைன், நேற்று மே.இ.தீவுகள் பதிலடி கொடுக்கும் போது ‘பிளாட் பிட்ச்’ பிளாட் பிட்ச் என்று புலம்பியதைக் கேட்க முடிந்தது.

84/3 என்ற தருணத்தில்தான் டொமினிகாவின் விண்ட்வேர்ட் தீவுகள் அணியின் சகாக்களான ஹாட்ஜும், அதனேசும் இணைந்தனர். 36.5 ஓவர்களில் 175 ரன்களைக் குவித்தனர். இந்தத் தொடரில் இதுதான் பெரிய பார்ட்னர்ஷிப். ஹாட்ஜிற்கு லக் இருந்தது, இங்கிலாந்தின் ஜே ரூட் ஒரு சுலப கேட்சை விட்டு சகாயம் செய்தார். அப்போது ஹாட்ஜ் 16 ரன்களில் இருந்தார். அதனேஸ், ஹாட்ஜ் ஆடிய ஷாட்களின் தரம் உண்மையில் டெஸ்ட் கிளாஸ். லாரா உற்சாகத்துடன் ரசித்தார். அதனேஸின் ஸ்ட்ரைக் ரேட் 82.82.

இருவரது ஆட்டமும் பார்க்க மிகப் பிரமாதமாக இருந்தது. ஒரு தொடருக்கு அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்து ஆட வேண்டும், ஆஷஸுக்காகத் தயார்படுத்திக் கொள்ள இந்தத் தொடரை சோதனைக்கூடமாக மாற்றிய இங்கிலாந்தின் ஆணவத்திற்கு நேற்று டொமினிகா சகாக்கள் பெரிய அடியைக் கொடுத்தனர்.

ஏற்கெனவே இந்த விஷயத்தை விக்கெ கீப்பர் ஜொஷுவா டாசில்வா எச்சரித்திருந்தார். இங்கிலாந்து ஆஷஸ் தொடரைக் கருத்தில் கொண்டு இதில் ஆடுவது அவர்களுக்கே எதிர்மறையாகப் போய் முடியும் என்றார். நேற்று அதன் முதல் படி, முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE