பாட்மிண்டனில் வாய்ப்பு எப்படி? - ஹாட்ரிக்கை குறிவைக்கும் சிந்து | பாரிஸ் ஒலிம்பிக்

By பெ.மாரிமுத்து

1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் விளையாட்டு அறிமுகமானது. தொடர்ந்து 1996-ம் ஆண்டில் அட்லாண்டா ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. அன்று முதல் பாட்மிண்டன் விளையாட்டு ஐந்து பிரிவுகளில் விளையாடப்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டில் சீனா 20 தங்கம், 12 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா 8 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியா ஒலிம்பிக்கில் இதுவரை பாட்மிண்டனில் 3 பதக்கம் வென்றுள்ளது. 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக சாய்னா நெவால், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் பின்னர் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்சயா சென் ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் களமிறங்குகின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியும் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியும் களமிறங்குகிறது. பாட்மிண்டனில் இம்முறை இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபற்றி ஓர் அலசல்...

ஹெச்.எஸ்.பிரனாய்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் ஹெச்.எஸ்.பிரனாய் பாட்மிண்டன் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ளார். முதல் முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ள பிரனாய்க்கு இந்த ஆண்டு ஏற்றம் மிகுந்ததாக அமையவில்லை. கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தியா ஓபனில் 3-வது இடத்தை பிடித்தார். ஆனால் மற்ற தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார். ஒட்டுமொத்தமாக, ஒற்றையர் பிரிவில் 10 தொடர்களில் பங்கேற்ற பிரனாய், இரண்டில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹெச்.எஸ்.பிரனாய் ‘கே’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். பிரனாய் இடம் பெற்றுள்ள பிரிவில் உலகத் தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள வியட்நாமின் லே டுக் ஃபாட், 82-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஃபேபியன் ராத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் பிரனாய் லீக் சுற்றை எளிதில் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாட்விக்-ஷிராக் ஷெட்டி: உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அபாரமான பார்மில் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த ஜோடி பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கக்கூடும். சாட்விக்-ஷிராக் ஷெட்டி ஜோடி இந்த ஆண்டில் 7 தொடர்களில் விளையாடி 2-ல் கோப்பையை வென்றது. மேலும், மலேசிய ஓபன் மற்றும் இந்தியா ஓபன் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் சாட்விக்-ஷிராக் ஷெட்டி ஜோடி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இந்தோனேஷியாவின் முஹம்மது ரியான் அர்டியான்டோ, ஃபஜர் அல்பியான் ஜோடியும் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்ஃபஸ், மார்வின் சீடல் ஜோடியும் பிரான்ஸின் லூகாஸ் கோர்வி, ரோனன் லாபர் ஜோடியும் இடம் பெற்றுள்ளது.

பி.வி.சிந்து: ஒலிம்பிக்கில் சாய்னா நெவால் தொடங்கிய பதக்க வேட்டையை முன்னெடுத்துச் சென்ற பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார். தற்போது ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்குகிறார். உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சிந்து, சிறந்த பார்மில் இல்லாவிட்டாலும் பெரிய அளவிலான தொடரில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துபவர்.

இந்த ஆண்டில் இதுவரை 8 தொடர்களில் விளையாடியுள்ள சிந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாரிஸ் ஒலிம்பிக்கில் சிந்து ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அவருடன் 75-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா, 111-ம் நிலை வீராங்கனையான மாலத் தீவுகளின் பாத்திமத் நாபாஹா அப்துல்ரசாக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் சிந்து எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடும்.

லக்சயா சென்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் லக்சயா சென் பாட்மிண்டன் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கிறார். இந்த ஆண்டில் ஒற்றையர் பிரிவில் 6 தொடர்களில் பங்கேற்ற அவர், ஆல் இங்கிலாந்து உட்பட இரண்டு தொடர்களில் முதல் 3 இடங்களைப் பிடித்தார். மேலும் இந்தோனேஷியா ஓபனில் காலிறுதி வரை முன்னேறியிருந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் லக்சயா சென் ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். கடினமான இந்த பிரிவில் உலகின் 3-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி, 41-ம் நிலை வீரரான கவுதமாலாவின் கெவின் கோர்டான், 52-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஜூலியன் கராகி ஆகியோரும் உள்ளனர். 22 வயதான லக்சயா சென், கிறிஸ்டிக்கு எதிராக 5 முறை விளையாடிய நிலையில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா: மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கும் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளது. இவர்கள் பதக்க மேடை ஏறவேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவது அவசியம். தனிஷா - அஸ்வினி ஜோடி இந்த ஆண்டில் 11 தொடர்களில் விளையாடியது. இதில் ஒரே ஒரு தொடரில் 3-வது இடம் பிடித்தது. 2 தொடர்களில் காலிறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிஹாரு ஷிடா ஜோடியும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் கிம் சோ யியாங், ஹாங் ஹீ யங் ஜோடியும் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் செட்யனா மபசா, ஏஞ்சலா யு ஜோடியும் உள்ளன. இதனால் தனிஷா - அஸ்வினி ஜோடிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE