ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர்: சென்னையில் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இருந்து அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக முதலில் சர்வதேச மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.

2023-ம் ஆண்டு அக்டோர் 16-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி வரை நடத்தப்பட்ட 20 தொடர்களின் வாயிலாக 2 பேர் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் வாங்கியுள்ளனர், மேலும் 8 பேர் ஐஎம் நார்ம்ஸை பூர்த்தி செய்துள்ளனர். இதுதவிர 20 வீரர்கள் தங்களது இஎல்ஓ ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் ஃபிடே நடுவர்கள் 20 பேர் ஐஏ நார்ம்ஸ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடரின் 2-வது கட்ட போட்டிகளை நாளை (21-ம் தேதி) முதல் வரும் அக்டோபர் 7-ம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் நடத்த தமிழ்நாடு செஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. இது 10 தொடர்களை உள்ளடக்கியதாகும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு சரோவர் ஓட்டலில் நாளை (21-ம் தேதி) முதல் வரும் 27-ம் தேதி வரை முதல் தொடர் நடைபெறுகிறது.

9 சுற்றுகளை கொண்ட ஒவ்வொரு தொடரிலும் 10 பேர் கலந்துகொள்வார்கள். இதில் 5 பேர் இந்தியர்களாகவும், 5 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் அலெக்சாண்டர் ஸ்லிஷெவ்ஸ்கி, ஸ்லோவேக்கியாவின் கிராண்ட்மாஸ்டர் மிகுலாஸ் மானிக், துர்க்மேனிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஒராஸ்லி அனாகெல்தியெவ், மங்கோலியாவைச் சேர்ந்த மகளிர் கிராண்ட் மாஸ்டர் உரிந்துயா ஊர்ட்சைக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் டெல்லியை சேர்ந்த ஃபிடே மாஸ்டர் டாவிக் வாதவான், தமிழகத்தைச் சேர்ந்தஎன்.லோகேஷ், எஸ்.எஸ்.மணிகண்டன், ஜி.ஆகாஷ், கர்நாடகாவைச் சேர்ந்த ஃபிடே மாஸ்டர்சாத்விக் அதிகா, தெலங்கானாவைச் சேர்ந்த ஃபிடே மாஸ்டர் ஆதிரெட்டி அர்ஜூன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு தொடருக்கும் ரூ.85 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE