பாரிஸ் ஒலிம்பிக்: தடகளத்தில் தடம் பதிக்குமா இந்தியா?

By பெ.மாரிமுத்து

33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 29 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார்.

ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களே வென்றுள்ளது. 1900-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த வீரர் ஒலிம்பிக்கில் கைப்பற்றிய முதல் பதக்கமாக இது இருந்தது.

இதன் பின்னர் அடுத்த பதக்கத்தை வெல்வதற்கு இந்தியாவுக்கு 120 வருடங்கள் ஆனது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். நூற்றாண்டு காலம் கடந்து இந்த பதக்கம் வெல்லப்பட்டாலும் அது வரலாற்று சாதனையாக அமைந்தது. ஏனெனில் தடகளத்தில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாக அது அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து தடகள வீரர், வீராங்கனைகளுக்கான மதிப்பு அதிகரித்தது.

இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் என 29 பேர் களமிறங்குகின்றனர். எப்போதும் போல் இல்லாமல் இம்முறை தடகள அணி போலந்து, துருக்கி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. தடகள அணி குறித்து ஓர் அலசல்…

தடகள அணி: அக்‌ஷதீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (ஆடவருக்கான 20 கி.மீ. நடை பந்தயம்), பிரியங்கா கோஸ்வாமி (மகளிர் 20 கி.மீ. நடை பந்தயம்), அவினாஷ் சேபிள் (ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), பருல் சவுத்ரி (மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ், 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஜோதி யார்ராஜி (மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), கிரண் பஹல் (மகளிர் 400 மீட்டர் ஓட்டம்), அங்கிதா தியானி (மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), தஜிந்தர்பால் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஆடவர் ஈட்டி எறிதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (மகளிர் ஈட்டி எறிதல்), சர்வேஷ் குஷாரே (ஆடவர் உயரம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் (ஆடவர் டிரிபிள் ஜம்ப்), முகம்மது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (ஆடவர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), வித்யா ராமராஜ், ஜோதிகா தண்டி, எம்.ஆர்.பூவம்மா, சுபா வெங்கடேசன் (மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிரியங்கா கோஸ்வாமி / சூரஜ் பன்வார் (நடை பந்தய கலப்பு மராத்தான்).

மாற்று வீரர்கள்: மிஜோ சாக்கோ குரியன் (ஆடவர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிராச்சி (மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்).

அன்னு ராணி: மகளிருக்கான ஈட்டி எறிதலில் பங்கேற்கும் அன்னு ராணியின் சிறந்த செயல்திறன் 63.24 மீட்டர் தூரம் ஆகும். 2022-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

ஜோதி யார்ராஜி: ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜோதி யார்ராஜி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் முதன் முறையாக களமிறங்குகிறார். தேசிய சாதனையை (12.78 விநாடிகள்) தன்வசம் வைத்துள்ள ஜோதி யார்ராஜி 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். சீனாவில் 2021-ல் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அவினாஷ் சேபிள்: ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் கலந்து கொள்கிறார் அவினாஷ் சேபிள். இந்த மாத தொடக்கத்தில் பாரிஸ் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் பந்தய தூரத்தை 8:09.91 நிமிடங்களில் அடைந்து தேசிய சாதனை படைத்தார். அவரது இந்த செயல் திறன் ஆசிய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

4X400 மீட்டர் தொடர் ஓட்ட அணிகள்: தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்கின்றன. முகம்மது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி கடந்த மே மாதம் பஹாமாஸில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஓட்டத்தில் 3 நிமிடம் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

அதேவேளையில் மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், இந்தியாவின் வித்யா ராமராஜ், ஜோதிகா தண்டி, எம்.ஆர்.பூவம்மா, சுபா வெங்கடேசன் அடங்கிய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

நீரஜ் சோப்ரா: ஆடவருக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தற்போது உலக சாம்பியனாகவும் உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர், பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார். 26 வயதான அவர், இம்முறையும் பதக்கம் வெல்லக்கூடிய இந்திய வீரர்களில் முக்கியமானவராக திகழ்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு 2022-ம் ஆண்டு டைமண்ட் லீக்கில் தங்கப் பதக்கம், ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா.

உலக சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில் 2022-ம் ஆண்டு யூஜின் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார். கடைசியாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 2022-ம் ஆண்டு பின்லாந்தின் துர்குவில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் நீளம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்வீடனில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்தார். 2023-ம் ஆண்டு மே மாதம் முதன் முறையாக உலக தடகள அமைப்பு வெளியிட்ட ஈட்டி எறிதல் தரவரிசையில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தற்போது ஜெர்மனியில் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டுள்ள அவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கிஷோர் குமார் ஜெனா: ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவுடன் நம்பிக்கை அளிக்கக் கூடியவராக கிஷோர் குமார் ஜெனா உள்ளார். 2022-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டில் கிஷோர் குமார் ஜெனா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 5-வது இடம் பிடித்தார். அவரது சிறப்பான ஈட்டி எறிதல் தூரம் 87.54 மீட்டர் ஆகும்.

பருல் சவுத்ரி: மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பருல் சவுத்ரி பங்கேற்கிறார். 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் 9:15.31 நிமிடங்களில் இலக்கை எட்டி தேசிய சாதனையை படைத்திருந்தார் பருல் சவுத்ரி. இதே ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் 15:10.35 நிமிடங்களில் இலக்கை அடைந்து தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 3000 மீட்டர் ஸ்டீள்சேஸில் வெள்ளிப் பதக்கமும், 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப் பதக்கமும் வென்று அசத்தினார். 2023-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப் பதக்கமும், 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

ஜெஸ்வின் ஆல்ட்ரின்: தமிழகத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் களமிறங்குகிறார். தேசிய சாதனையை (8.42 மீட்டர்) தன் வசம் வைத்துள்ள ஜெஸ்வின் ஆல்ட்ரின் 2023-ம் ஆண்டு அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

தஜிந்தர்பால் சிங் தூர்: ஆடவருக்கான குண்டு எறிதலில் பங்கேற்கிறார் தஜிந்தர்பால் சிங் தூர். அவர், ஆசிய அளவிலான சாதனையை (21.77 மீட்டர்) தன்வசம் வைத்துள்ளார். 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர், 2023-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று அசத்தினார். எனினும் இந்த சீசனில் அவரது சிறந்த செயல் திறன் 20.38 மீட்டராகவே உள்ளது.

டிரிப்பிள் ஜம்ப்: ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் பிரவீன் சித்ரவேல் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருமே உலக தரவரிசையின் அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அப்துல்லா அபுபக்கர் 21-வது இடத்திலும், பிரவீன் சித்ரவேல் 23-வது இடத்திலும் உள்ளனர். பிரவீன் சித்ரவேலின் சிறப்பான செயல்திறன் 17.37 மீட்டராகும். அப்துல்லா அபுபக்கரின் சிறந்த செயல்திறன் 17.02 மீட்டராகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்