அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஐசிசி-க்கு ரூ.167 கோடி இழப்பு?

By செய்திப்பிரிவு

மும்பை: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.167 கோடி.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் பொருட்டு அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக பிரத்யேகமாக அவசரம் அவசரமாக அங்கு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மைதானங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும், இந்திய அணி உட்பட பல அணிகளின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்தன.

இந்த நிலையில்தான் உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை கொழும்புவில் நடைபெறும் ஐசிசி வருடாந்திர மாநாட்டில் இந்த இழப்பு தொடர்பாக விவாதிக்கப்படலாம். இதே மாநாட்டில் மற்றொரு விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. அது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவை ஐசிசி தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது. இதனால் நாளை நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டுக் கூட்டம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE