பாரிஸ் ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்தியாவின் பொற்காலம் திரும்புமா?

By பெ.மாரிமுத்து

இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட விளையாட்டான ஹாக்கி, உலகின் முதன்மையான விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1908-ம் ஆண்டுலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சர்வதேச விளையாட்டு கட்டமைப்பு இல்லாததால் 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கிலிருந்து ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டது.

இதன் எதிரொலியாகவே பிரான்ஸ் தலைநகரான பாரிஸில சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இருந்து ஹாக்கி நிரந்தரமாக இடம் பெற்றது.

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்திய ராணுவத்துக்கு வலிமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்ப்பதற்கான கருவியாக ஹாக்கி விளையாட்டு பயன்படுத்தப்பட்டது. இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1927-ம்ஆண்டில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் உறுப்பினரானது. இதைத்தொடர்ந்து இந்திய ஆடவர் ஹாக்கி அணி 1928-ம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் முதன்முறையாக களமிறங்கியது.

ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கியில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இதன் மூலம் இந்திய அணியின் 41 வருட பதக்க ஏக்கம் தீர்ந்திருந்தது. 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் கடந்த ஒலிம்பிக்கில் வெண்லகப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

12 அணிகள் கலந்து கொண்டுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல போராட உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி குறித்த ஒரு அலசல்….

சமீபத்திய செயல் திறன்: 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது அதன் பின்னர் 2021-22-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஹாக்கி புரோ லீக்கில் 3-வது இடம் பிடித்தது. தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இதில் இருந்து மீண்டு 2022-23 புரோ ஹாக்கி லீக்கில் 4-வது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது. இந்தத் தொடர் உயர்மட்ட அணிகளுக்கு எதிரான இந்தியாவின் தடுமாற்றத்தை தோலுரித்து காட்டியது.

இதன் பின்னர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம்வென்றது. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குதகுதி பெற்றது. ஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியிருந்தது. இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடித்திருந்தார். அவர், தலைமையில்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி களம் இறங்குகிறது. நட்சத்திர வீரரான ஹர்மன்பிரீத் சிங் அற்புதமான டிபன்டரும், சிறந்த டிராக் ஃபிளிக்கரும் ஆவார். 41 வருடங்களுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம்வென்றதில் முக்கிய பங்குவகித்த ஹர்மன்பிரீத் சிங் தற்போது கேப்டனாக மீண்டும் ஒரு முறை பதக்க மேடையை அலங்கரிக்கக்கூடும்.

அவருடன், இரண்டு முறை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதை வென்ற பி.ஆர்.ஜேஷ், கம்பீரமான நடுகள வீரர் மன்பிரீத் சிங், ஸ்ட்ரைக்கர் மன்தீப் சிங் மற்றும் திகைப்பூட்டும் நடுகள வீரரும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளவருமான ஹர்திக் சிங் ஆகியோர் ஆட்டத்தில் மாயாஜால தருணங்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில்உள்ள இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் ‘பி’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில்ஒலிம்பிக் சாம்பியனான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம்,5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா,7-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா,10-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து, 12-வதுஇடத்தில் உள்ள அயர்லாந்து ஆகிய அணிகளும்இடம் பெற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக இந்தியா கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் சமீபகால போட்டிகளில் இந்த இரு அணிகளுக்கு எதிராகவும் இந்தியா தடுமாற்றம் அடைந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 27-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது.

தொடர்ந்து 29-ம் தேதி அர்ஜெண்டினாவுடனும், 30-ம் தேதி அயர்லாந்துடனும், ஆகஸ்ட் 1-ம் தேதிபெல்ஜியத்துடனும், 2-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும்பலப்பரீட்சை நடத்துகிறது. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். ஆகஸ்ட் 4-ம் தேதி கால் இறுதி சுற்றும், 6-ம் தேதி அரைஇறுதி சுற்றும் நடைபெற உள்ளது. பதக்கங்களுக்கான போட்டி 8-ம் தேதி நடைபெறுகிறது.

ஒலிம்பிக் ஹாக்கியில் இதுவரை:

1928-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமானது முதல் 1956-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் வரையிலான காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியா இரட்டை ஹாட்ரிக் சாதனையைப் பதிவு செய்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா 1928, 1932 மற்றும் 1936-ம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றது. அதன் பின்னர் சுதந்திர நாடாக 1948, 1952 மற்றும் 1956-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வேட்டையாடியது. 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க வேட்டையை பாகிஸ்தான் தடுத்தது. ஆனால் 1964-ம் ஆண்டு டோக்கியோவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா மீண்டும் தங்கப் பதக்கம் வென்றது. இதன் பின்னர் 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
தங்கப் பதக்கங்களைத் தவிர, 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், 1968-ம்
ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக், 1972 முனிச் ஒலிம்பிக் ஆகியவற்றில் வெண்கலத்தை வென்றது. 1980-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்க வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஹாக்கியில் இந்தியா தேக்கம் அடைந்ததற்கு ஆடுகளமும் காரணமாக அமைந்தது. புல்தரை ஆடுகளத்தில் இருந்து செயற்கை ஆடுகளத்துக்கு ஹாக்கி உருமாற்றம் அடைந்த போது இந்திய அணி தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லை.

அதேவேளையில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய அணிகள் செயற்கை ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தின. செயற்கை ஆடுகளங்களுக்கு மாறிய பின்னர் ஹாக்கி விளையாட்டு அதன் வேகத்தில் பெரிய அளவில் மாற்றத்தைக் கண்டது. செயற்கை புல்தரையில் சிறந்து விளங்க தேவையான வேகம் இல்லாதது இந்திய அணிக்கு இடையூறாக இருந்தது,ஏனெனில் அவர்கள் வேகத்தை விட திறமையில் அதிக கவனம் செலுத்தினர். எனினும் தற்போது இந்திய அணியின் வியூகங்களும், தொழில்நுட்ப நுணுக்கங்களும் மாற்றம் அடைந்துள்ளன. இதற்கான பலன் பாரிஸில் கிடைக்கக்கூடும்.

பாரிஸ் ஒலிம்பிக் - இந்திய ஹாக்கி அணி விவரம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்