‘கனவு நனவானது’ - ரியல் மாட்ரிட் கிளப் அணியில் அறிமுகமான எம்பாப்பே!

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: கால்பந்தாட்ட உலகின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவரான கிலியன் எம்பாப்பே, ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணியில் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவரது அறிமுகத்தை விழா எடுத்து கொண்டாடியது அந்த அணி.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஐந்து ஆண்டு காலத்துக்கான ஒப்பந்தத்தில் எம்பாப்பே இணைந்தார். அவருக்கு ரியல் மாட்ரிட் அணியின் தலைவர் புளோரன்டினோ பெரெஸ், 9-ம் எண் ஜெர்சியை கொடுத்து வரவேற்றார்.

“எனது கனவு பலித்த அற்புத தருணம் இது. பல ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிகக்க விளையாட வேண்டும் என விரும்பினேன். நான் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த கிளப் அணிக்காக என்னை அர்ப்பணிக்க உள்ளேன்” என உணர்ச்சிவசமாக எம்பாப்பே பேசி இருந்தார். அவரது பெயரை மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உரத்த குரலில் சொல்லியபடி இருந்தனர்.

எம்பாப்பே அபார திறன் கொண்ட வீரர். நமது வெற்றி நடையை தொடர செய்ய அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது வாழ்நாள் கனவையும் அவர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என புளோரன்டினோ பெரெஸ் தெரிவித்தார். அப்போது எம்பாப்பேவின் பெற்றோரும் மைதானத்தில் இருந்தனர். அடுத்த சில நாட்களில் புதிய கிளப் அணியுடன் எம்பாப்பே பயிற்சியை தொடங்க உள்ளார். விரைவில் முதல் போட்டியிலும் விளையாட உள்ளது.

25 வயதான எம்பாப்பே, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார்.

கடந்த 2017 சீசன் முதல் கடந்த சீசன் வரை பிஎஸ்ஜி கிளப் அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இந்த அணி பிரான்ஸ் நாட்டின் கிளப் அணி என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்ஜி அணிக்காக 306 ஆட்டங்களில் ஆடியுள்ளார். மொத்தம் 256 கோல்கள் பதிவு செய்துள்ளார்.

இந்த சூழலில் எதிர்வரும் கிளப் சீசனுக்காக அவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த அணிக்காக ஒரு சீசனில் அவர் விளையாடுவதற்கு சம்பளமாக சுமார் 15 மில்லியன் யூரோக்களை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் இணைந்துள்ளதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE