மாற்றுத் திறனாளிகளை கிண்டலடித்து ரீல்ஸ்: எதிர்ப்புக்குப் பிறகு மன்னிப்புக் கோரினார் ஹர்பஜன் சிங்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட ரீல்ஸ் வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மன்னிப்புக் கோரியுள்ளார்.

விக்கி கவுஷல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட் நியூஸ்’ என்ற திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தவ்பா தவ்பா’ என்ற பாடல் அண்மையில் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஒரு வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகள் போல நடந்து வருவது போல அந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பலரும் ஹர்பஜன் சிங், ரெய்னா உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹர்பஜன் உடனடியாக அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இரண்டு முறை பதக்கம் வென்ற பாரா-பாட்மிண்டன் சாம்பியன் மானசி ஜோஷி இதுகுறித்து தனது அதிருப்தியை கமெண்ட்டில் தெரிவித்திருந்தார். அதில் அவர், “ஸ்டார்களான உங்களிடமிருந்து அதிக பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யாதீர்கள். இது வேடிக்கை அல்ல. உங்களுடைய நடத்தை எவ்வளவு வலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியவில்லை. உங்களை சுற்றியிருப்பர்வகள் இந்த வீடியோவுக்கு தரும் பாராட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ள ஹர்பஜன் சிங், இந்த விவகாரம் குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்தில் நடந்த போட்டியை வென்ற பிறகு நாங்கள் பதிவிட்ட ‘தவ்பா தவ்பா’ பாடல் குறித்து புகார் தெரிவிக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் ஏற்பட்ட வலியை பிரதிபலிக்கவே அந்த வீடியோவை பகிர்ந்தோம். யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இன்னும் நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால், அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை இப்படியே நிறுத்திவிட்டு முன்னோக்கிச் செல்லலாம்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE