Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா

By செய்திப்பிரிவு

பெர்லின்: ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் முன்கள வீரர் லாமின் யாமலை புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா.

“சர்வதேச கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக லாமின் யாமல் உருவாகிக் கொண்டுள்ளார். ‘யூரோ கோப்பை - 2024’ தொடரில் அவரது கள செயல்பாடு எப்படி என்பதை நாம் அனைவரும் கண்டோம். அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து உதவுகிறார். அரையிறுதியில் கோல் பதிவு செய்துள்ளார்.

சரியான முடிவை களத்தில் எடுப்பது தான் தேர்ந்த கால்பந்தாட்ட வீரருக்கான அடையாளம். அது அவரிடம் உள்ளதை நான் பார்க்கிறேன். பந்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும், எப்போது ட்ரிபிள் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார். கால்பந்து சார்ந்த தெளிவான புரிதலை அவர் கொண்டுள்ளார்.

அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளுக்குள் அவர் Ballon d’Or விருதை அவர் வெல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. குறைந்தபட்சம் அந்த போட்டியிலாவது அவர் இருப்பார். அவரது விளையாட்டு கரியரில் அது நிச்சயம் நடக்கும். அதை நான் உறுதியாக நம்புகிறேன்” என பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.

நடப்பு யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் கோல் பதிவு செய்ய யாமல் அசிஸ்ட் செய்து உதவியிருந்தார். இந்த தொடரில் சிறந்த இளம் வீரர் என்ற விருதை யாமல் வென்று இருந்தார்.

Ballon d’Or விருது: பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். இந்த விருதை அதிகபட்சமாக 8 முறை மெஸ்ஸி வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை இவ்விருதை வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE