“ரோகித்தை கேப்டனாக நியமித்தது நான் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள்” - கங்குலி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது நான் தான் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் மூன்று ஃபார்மெட்டுக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் செயல்படுகிறார். அண்மையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து கோலி விலகியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்தை முன்னெடுத்தவர் அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி.

“ரோகித் வசம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை நான் ஒப்படைத்த போது என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்போது ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. என்னுடைய இந்த நகர்வுக்கு பலரும் என்னை விமர்சித்தனர். இருந்தாலும் நான் தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள்” என கங்குலி தெரிவித்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அது குறித்தும் கங்குலி பேசியுள்ளார். “டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென அணி நிர்வாகத்திடம் நான் தெரிவிப்பேன். புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE