ஜெய்ஸ்வால் - கில் இணை மிரட்டல்: ஜிம்பாப்வே-க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

By செய்திப்பிரிவு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் இதில் இருந்து மீண்டு அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதன்மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஹராரேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் சிக்கந்தர் ராசா மட்டும் அதிகபட்சமாக 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணியில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 153 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இந்தக் கூட்டணியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறியது. ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். மறுபுறம் கில் 39 பந்துகளில் 58 ரன்களைச் சேர்க்க விக்கெட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இந்தி அணி. இதன் மூலம் டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE