பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டி: எளிதான பிரிவில் சிந்து, ஹெச்.எஸ்.பிரனாய்

By செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட்11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பாட்மிண்டன் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு போட்டி தரவரிசையில் 10-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் சிந்து, பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அவருடன் 75-ம் நிலைவீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா, 111-ம் நிலை வீராங்கனையான மாலத்தீவுகளின் பாத்திமத் நாபாஹா அப்துல் ரசாக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் சிந்து எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடும்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஹீ பிங் ஜியாவோவை எதிர்கொள்ளக்கூடும். இதில் அவர், வெற்றி பெறும் பட்சத்தில் கால்இறுதி சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஷென் யு ஃபெயுடன் மோதுவார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றசிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். தற்போது 3-வது முறையாக பதக்கம் வெல்லும் முனைப்புடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் ‘கே’ பிரிவில்இடம் பெற்றுள்ளார். முதன்முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கும் அவருக்கு போட்டித் தரவரிசையில் 13-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரனாய் இடம் பெற்றுள்ள பிரிவில் உலகத் தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள வியட்நாமின் லே டுக் ஃபாட், 82-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஃபேபியன் ராத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீரரான லக்சயா ஷென் ‘எல்’ பிரிவில் இடம்பெற்றுள்ளார். கடினமான இந்த பிரிவில் உலகின் 3-ம் நிலை வீரரானஇந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி, 41-ம் நிலை வீரரான கவுதமாலாவின் கெவின் கோர்டான், 52-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஜூலியன் கராகி ஆகியோரும் உள்ளனர். 22 வயதான லக்சயா ஷென், கிறிஸ்டிக்கு எதிராக 5 முறை விளையாடிய நிலையில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிஹாரு ஷிடா ஜோடியும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் கிம் சோ யியாங், ஹாங் ஹீ யங் ஜோடியும் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் செட்யனா மபசா, ஏஞ்சலா யு ஜோடியும் உள்ளன.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடிக்கு போட்டி தரவரிசையில் 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE