“இந்திய வீரர்கள் 3 ஃபார்மெட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்” - பயிற்சியாளர் கம்பீர்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய வீரர்கள் மூன்று வித கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டு வீரர்களின் வாழ்வில் காயங்கள் ஏற்படும். மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டில் விளையாடும்போது அதை தவிர்க்க முடியாது. அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வரலாம். மீண்டும் விளையாடலாம். குறிப்பிட்ட வீரரை ஒரு ஃபார்மெட்டில் விளையாட வைப்பதற்காக அவரை மற்றவற்றில் இருந்து தவிர்க்க போவதில்லை. எனக்கு அதில் பெரிய நம்பிக்கையும் இல்லை.

வீரர்கள் அனைத்து ஃபார்மெட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில், தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை மிக நீண்ட பயணம் அல்ல. தேசத்துக்காக விளையாடும் போது முடிந்தவரை விளையாட வேண்டும். சிறந்த ஃபார்மில் இருக்கும் போது அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாட வேண்டும். தனி நபர்களை காட்டிலும் அணியின் நலனே முக்கியம். ஏனெனில், கிரிக்கெட் குழு விளையாட்டு. இங்கு அணிதான் எல்லாம்” என கம்பீர் கூறியுள்ளார்.

பயிற்சியாளராக கம்பீரின் பயணம் எதிர்வரும் 2027-ம் ஆண்டு வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி போன்றவை அவர் முன்னே உள்ள முக்கிய அசைன்மென்ட். இலங்கை சுற்றுப் பயணம் முதல் அவரது பயிற்சியாளர் பணி தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE