“டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஆர்வமுடன் உள்ளேன்” - அர்ஷ்தீப் சிங்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்தவர் அர்ஷ்தீப் சிங். 25 வயதான இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர்.

அண்மையில் உலகக் கோப்பை வெற்றி மற்றும் தனது கிரிக்கெட் இலக்கு சார்ந்து ‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில பத்திரிகையுடன் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தெரிவித்த முக்கிய விஷயங்கள். “இந்திய அணியில் கடந்த 2022-ல் நான் இணைந்தேன். அப்போதே எனக்கு எனது ரோல் குறித்து தெரிவிக்கப்பட்டது.

டெத் ஓவர்களில் பந்து வீச வேண்டும் என தெரிவித்தார்கள். தொடக்கத்தில் இருந்தே அதில் அணி நிர்வாகமும் உறுதியாக இருந்தது. நடந்த முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பல நாட்கள் முன்னதாகவே எங்களது திட்டமிடல் தொடங்கிவிட்டது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உடன் இந்த தொடரை அணுகுவது குறித்து பேசினோம். சூழலை அறிந்து செயல்படுவது திட்டம். இந்த தொடருக்கு முன்னதாக இரண்டு டி20 தொடரில் விளையாடி இருந்தோம். அதில் பந்தை நிதானமாக வீசி இருந்தோம்.

அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டதும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை அறிந்தோம். சரியான இடத்தில் பந்து வீசுவதில் கவனம் வைத்தோம். அந்த தெளிவான திட்டமிடல் காரணமாக நாங்கள் எதிர்பார்த்த ரிசல்டை பெற்றோம்.

பும்ரா, சிராஜ், ஷமி (எல்லோரையும் அண்ணன் என அழைக்கிறார்) உடன் இணைந்து பந்து வீசுவதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. அது தனிப்பட்ட முறையில் என்னை பக்குவமடைய செய்கிறது. உலகக் கோப்பை தொடரின் போது பந்த் ஸ்விங் செய்ய வேண்டாம் எனவும், ஹார்ட் லெந்தில் வீசுமாறும் பும்ரா தெரிவித்தார். அது உதவியது.

தென் ஆப்பிரிக்க அணியுடனான இறுதிப் போட்டியில் 19-வது ஓவரை நான் வீசி இருந்தேன். அணியில் இடம்பிடித்த நாள் முதல் இதுதான் எனது பணி. அந்த ஓவரை நான் வீசுவதற்கு முன்னர் பும்ரா இரண்டு ஓவர் மற்றும் ஹர்திக் ஒரு ஓவர் வீசி இருந்தார். அதன் காரணமாக 19-வது ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் வீசி இருந்தேன். அது எதிரணி மீது ரன் குவிப்பு சார்ந்த அழுத்தம் தந்தது.

கவுன்டி கிரிக்கெட்டில் நான் விளையாடியது எனக்கு நிறைய புரிதலை தனது. இதற்காக நான் பிசிசிஐ-க்கு நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதன் மூலம் என்னால் நீண்ட ஸ்பெல் மற்றும் லெந்த் பால் வீச முடிகிறது. அது தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் எனக்கு பலன் தந்தது.

இந்திய அணிக்காக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் நானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஆர்வமுடன் உள்ளேன். அது எனது கனவு. பும்ராவும் டெஸ்ட் கிரிக்கெட்டை புகழ்ந்து பேசுவார். அந்த கனவு நாளை எதிர்பார்த்து உள்ளேன்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE