பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் தவறாக நடந்துகொண்ட ஷாஹீன் அப்ரிடி? - பிசிபியில் புதிய சர்ச்சை

By செய்திப்பிரிவு

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும், 2024 டி20 உலகக் கோப்பையின் போதும் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அணியின் பிற ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சியாளர்கள் கேரி கிர்ஸ்டன், அசார் மஹ்மூத் உள்ளிட்டோர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு எதிராக பயிற்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனினும், வீரர்களின் ஒழுங்கு மீறல்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. வீரர்கள் அணியில் ஒழுக்கத்தைப் பேணுவது மேலாளர்களின் பொறுப்பு. ஆனால், என்ன காரணத்துக்காகவோ பயிற்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பிசிபி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் உலகக் கோப்பை தொடரில் படுதோல்வி கண்டு வெளியேறியது. தொடர்ந்து அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிரடி நீக்கங்கள் நடந்தன. முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் தேர்வுக்குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் தான் ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சியாளர்களிடம் தவறான நடத்தையை வெளிப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE