சாம்பியன்ஸ் டிராபி - இந்திய அணி பாக்., செல்ல வாய்ப்பில்லை: தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

மும்பை: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி அங்கு செல்லாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி வசம் பிசிசிஐ கோர உள்ளதாக தகவல்.

அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் திட்டமிடப்பட்டு உள்ளதாக சொல்லப்பட்டது.

இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. அரசின் முடிவை ஏற்போம் என சொல்லப்பட்டு வந்த சூழலில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி வசம் பிசிசிஐ கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2023-ல் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்தியது. இருந்தாலும் ஹைபிரிட் முறையில் இந்த தொடர் நடைபெற்ற காரணத்தால் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெற்றன. இதில் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. சாம்பியன் பட்டமும் வென்றது. அது போலவே எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த வேண்டுமென கோர உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE