கொலம்பிய ரசிகர்கள், உருகுவே வீரர்களிடையே மோதல் | கோபா அமெரிக்கா களேபரம்

By செய்திப்பிரிவு

சார்லோட்: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் உருகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா அணி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தச் சூழலில் போட்டி நடைபெற்ற அமெரிக்காவின் சார்லோட் மைதான பார்வையாளர் மாடத்தில் கொலம்பிய நாட்டு ரசிகர்களை உருகுவே அணி வீரர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவில் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தாக்கிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆட்டத்துக்கு பிறகு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உருகுவே வீரர்கள் சேஞ்ச் ரூமுக்கு திரும்பிய போது, அவர்கள் மீது காலி கேன்கள் மற்றும் தொப்பிகளை ரசிகர்கள் தூக்கி வீசியுள்ளனர். அதையடுத்து இந்த மோதல் வெடித்துள்ளது. வீரர்களும், ரசிகர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

டார்வின் நுனேஸ், ஜோஸ் மரியா, ரொனால்ட் அராவ்ஜோ ஆகிய உருகுவே வீரர்கள் இந்த மோதலில் ஈடுபட்டனர். அவர்களை கொலம்பிய ஆதரவாளர்கள் வசைபாடியாது இதற்கு காரணம் என தெரிகிறது. இதையடுத்து மைதானத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து உருகுவே கேப்டன் கிமினெஸ் குற்றச்சாட்டு வைத்தார். ஆட்டத்தை பார்க்க வந்த தங்கள் குடும்பத்தினரின் நலனுக்காக அவர்களுடன் தாங்கள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார். அடுத்த போட்டிகளில் இது போல நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் மூன்று முத்தான வாய்ப்புகளை மிஸ் செய்திருந்தார் நுனேஸ். அதுவே அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் கொலம்பியா விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE