கடைசி நேர கோல்: நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து | Euro Cup

By செய்திப்பிரிவு

டார்ட்மண்ட்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் வாட்கின்ஸ் பதிவு செய்த லேட் கோல் அந்த அணியின் வின்னிங் கோல் ஆனது.

ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றது நெதர்லாந்து. அந்த அணியின் ஸேவி சைமன்ஸ், பாக்ஸின் எட்ஜில் இருந்து அடித்த ஷாட் கோல் ஆனது. ஆனால், அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் பதிவு செய்தார். ஆட்டம் 1-1 என சமன் ஆனது. அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அது கோலாக மாறவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து அணி மாற்றங்களை செய்தது.

அந்த வகையில் 81-வது நிமிடத்தில் ஹாரி கேன் களத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு மாறாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார். கோல் பதிவு செய்வதற்கான ஆக்ரோஷ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. 90-வது நிமிடத்தில் அதற்கான பலனும் இங்கிலாந்துக்கு கிடைத்தது. பால்மர் தந்த பந்தை லாவகமாக எதிரணியின் வலைக்குள் தள்ளி இருந்தார் வாட்கின்ஸ். அதன் பிறகு ஆட்டத்தில் கூடுதலாக ஆறு நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது.

90 + 6 நிமிடங்கள் முடிந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அது ஆட்டத்தின் நிறைவை உறுதி செய்தது. அதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி ஸ்பெயின் உடன் இறுதியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. அயலக மண்ணில் பிரதான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற 1966 உலகக் கோப்பை மற்றும் 2020 யூரோ கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் அந்த அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE