“சமமான பரிசுத் தொகை போதும்” - ராகுல் திராவிட் அணுகுமுறைக்கு குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

மும்பை: சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத் தொகை இருக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ கொடுத்த பரிசுத் தொகையை ராகுல் திராவிட் பாதியாக குறைத்துக்கொண்ட நிகழ்வு தெரியவந்துள்ளது.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கெனவே அறிவித்து இருந்தார். ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடியும், இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தான், சக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே தனக்கும்போதும் என்று ராகுல் திராவிட் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ வழங்கிய முழு பரிசுத் தொகையை ஏற்க மறுத்து, சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத்தொகை இருக்க வேண்டும் எனக் கூறி ரூ.5 கோடிக்கு பதிலாக அதில் பாதியை ரூ.2.5 கோடியை மட்டும் ராகுல் திராவிட் பெற்றுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தி தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த பிசிசிஐ ஊழியர் ஒருவர், "திராவிட் மற்ற உதவி பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே போதும் எனக் கூறிவிட்டார். அவரின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ராகுல் திராவிட்டின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE