இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் கம்பீர் உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமகால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகிலிருந்து பார்த்துள்ளார்.

தனது கரியர் முழுவதும் நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர் என்பதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன். இந்திய அணி குறித்த அவரின் தெளிவான பார்வையும், பரந்த அனுபவமும் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்துள்ளது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன சொன்னார் கம்பீர்? - முன்னதாக, நிகழ்வு ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர் “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவரான கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

அக்ரம் சொன்ன முக்கியக் கருத்து: சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் கூறும்போது, “ஆம்! கவுதம் கம்பீர்தான் சரியான நபர். ஆனால் கவுதம் கம்பீர் அந்த வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். கம்பீர் அரசியிலிலிருந்தும் விலகிவிட்டார். ஏனெனில் அரசியல் நிறைய நேரத்தைத் தின்றுவிடும். அவர் புத்திசாலியாக இருப்பதால் அரசியல் காலத்தை விழுங்கும் பணி என்பதைப் புரிந்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு அருமையான மகள்கள் உள்ளனர்.

கவுதம் கம்பீர், எளிமையானவர், நேர்மையானவர், மனதில் பட்டதை பேசக்கூடியவர். கடினமான நபர் அல்ல. தெளிவாகப் பேசுவார், தைரியமாக பேசுவார், பேசும் முன் இருமுறை யோசிப்பது என்ற தயக்கமெல்லாம் இல்லாதவர். இத்தகைய குணங்கள் இந்திய கிரிக்கெட் பண்பாட்டில் இல்லாதவை. எங்கள் கிரிக்கெட் பண்பாட்டில் நாங்கள் அடுத்தவரை புண்படுத்தாதவாறு கருத்துகளைச் சொல்வோம். ஆனால், கம்பீர் வித்தியாசமானவர். தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை முகத்துக்கு நேராகச் சொல்லி விமர்சிப்பவர். அதனால் அவரை அனைவருக்கும் பிடிக்கும். சில வேளைகளில் ஆக்ரோஷமாகிவிடுவார். இதே ஆக்ரோஷத்தை அணியினரிடத்திலும் கடத்தி வெற்றி உந்துதலை ஊட்டுவார்” என்றதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளராக அனுபவம் எப்படி? - கம்பீருக்கு சர்வதேச தொடர் அளவில் பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், இரண்டு ஐபிஎல் அணிகளின் வழிகாட்டியாக இருந்துள்ளார். லக்னோ அணியின் வழிகாட்டியாக அந்த அணியை 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வைத்தார். தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேகேஆர் அணிக்கு மீண்டும் திரும்பிய கம்பீர், தனது தலைமையில் அணியை பிளே ஆப் சுற்று பட்டியலில் முதலிடத்தை பெற வைத்துள்ளார்.

தான் விளையாடிய காலத்தில் வெற்றிகரமான வீரராக இருந்தவர் கம்பீர். இந்தியா 2007ல் டி20 உலகக் கோப்பை வென்றபோதும், 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியவர் கம்பீர். இதுதவிர ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை ஏழு சீசனுகளுக்கு வழிநடத்திய கம்பீர் இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்ததோடு, ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியை தகுதிபெற வைத்தார். இதனால், இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரியான சாய்ஸ் என்ற அடிப்படையில் அவரை பிசிசிஐ அணுகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE