ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும்: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ள இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமல் தெரிவித்தார்.

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நாளில் தேசிய கொடியை 4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான சரத் கமல் ஏந்திச் செல்லஉள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரத் கமல் கூறியதாவது:

ஒலிம்பிக் போட்டிக்கு இம்முறை சிறந்த முறையில் தயாராகி உள்ளேன். நான் மட்டும் அல்ல இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் உள்ள அனைவருமே வெளிநாடுகளில் விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அணிகள் பிரிவில் முதன்முறையாக விளையாட உள்ளோம். இதனால் இதில்அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முக்கியமாக இரட்டையர் ஆட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஏனெனில் ஒலிம்பிக்கை பொறுத்தவரையில் டேபிள் டென்னிஸில் முதல் ஆட்டமே இரட்டையர் ஆட்டமாகத்தான் இருக்கும்.

அணிகள் பிரிவில் மொத்தம் 16 அணிகளே பங்கேற்கும். இதனால் கடுமையான போட்டி இருக்கும். சீனா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கடும் சவால் அளிக்கக்கூடியவை. ஆசிய அணிகளுக்கு எதிராக நாம் சிறப்பாக விளையாடி உள்ளோம். இம்முறை டிரா எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் டேபிள் டென்னிஸில் நாம் சீரான முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கு சான்று உலகத் தரவரிசையில் நாம் 11-வதுஇடத்தில் இருப்பதுதான்.

மேலும் ஒற்றையர் பிரிவில் நான் 40-வது இடங்களுக்குள் உள்ளேன். மகளிர் பிரிவில் ஜாஅகுலா, மணிகாபத்ரா ஆகியோர்30 இடங்களுக்குள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் பதக்கம் வெல்ல போராடுகிறோம். இம்முறையும் அதை தொடர்வோம். தனிப்பட்ட முறையில் இம்முறை கால் இறுதி சுற்றை எட்ட வேண்டும் என இலக்கு வைத்துள்ளேன். பதக்கம் வெல்வோம் என்றநம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்தமாக இம்முறை இந்தியா இரட்டை இலக்க பதக்கம் கைப்பற்றும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இவ்வாறு சரத் கமல் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE