ரூ.125 கோடியில் யாருக்கு எவ்வளவு? - டி20 சாம்பியன் இந்திய அணிக்கான பரிசுத் தொகை பகிர்வு விவரம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்தப் பரிசுத் தொகை எவ்வாறு பிரிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடி கொடுக்கப்படும். இந்த 15 வீரர்களில் ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாத சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ஜெய்ஸ்வால் ஆகியோரும் அடக்கம். இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடி வழங்கப்படும். அணியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற 5 பேருக்கு தலா தலா ரூ.2.5 கோடி வழங்கப்படும்.

மேலும், மூன்று பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட அணியின் பணியாளர்கள் 10 பேருக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்படும். ரிசர்வ் வீரர்களாக ரிங்கு சிங், ஷுப்மன் கில், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். இப்படியாக உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், பிசிசிஐ பணியாளர்கள் என 42 பேருக்கும் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்ற விவரத்தை வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ பணியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டதாகவும் பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE