2-வது டி20-ல் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இந்திய மகளிர் அணி?

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 190 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது ஆட்டத்தில் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சானல் நேரடிஒளிபரப்பு செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மகளிர் அணியால் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இதனால் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அதேவேளையில் ஒருநாள் போட்டி தொடர், டெஸ்ட் தொடர்களை இழந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று டி 20 தொடரை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டு 3 கேட்ச்களை தவறவிட்டனர். மேலும் பேட்டிங்கில் நடு ஓவர்களில் மந்தமாக செயல்பட்டனர். இந்த விஷயங்களில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். தென் ஆப்பிரிக்க அணியில் முதல் ஆட்டத்தில் 81 ரன்கள் விளாசிய தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் 57 ரன்கள் சேர்த்த மரிஸான் காப் ஆகியோர் மீண்டும் ஒரு முறை இந்திய பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE