சுவாரஸ்யமில்லாத சன்ரைசர்ஸ் ஆட்டம்: ராயுடு சதத்தால் சிஎஸ்கே எளிதான வெற்றி

By க.போத்திராஜ்

ராயுடுவின் சிறப்பான சதத்தால் புனேயில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுவாரஸ்யமில்லாத பேட்டிங், எதிரணிக்கு சிரமம் கொடுக்காத பந்துவீச்சு, குழப்பமடைந்த களவியூகம், பீல்டிங் ஆகியவை சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக மாறி வெற்றியை எளிதாக்கியது.

முதலில் பேட்டிங் செய்து 118 ரன்கள் அடித்து, தனது கட்டுக்கோப்பான, துல்லியமான பந்துவீச்சால் மும்பை அணியைச் சுருட்டி வெற்றிபெற்றதும் இந்த சன்ரைசர்ஸ் அணிதான்.

இதேபோல இந்த சீசனில் முதல்பேட்டிங் செய்து, தனது சிறப்பான பந்துவீச்சால் எதிரணியை 4 முறை சுருட்டி வெற்றிபெற்றதும் இதே சன்ரைசர்ஸ் அணிதான். ஆனால், இந்தப் போட்டியில் மட்டும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகியவை சொத்தையாக இருந்தது ஏனோ தெரியவில்லை.

ஒருவேளை ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டோம் என்ற மெத்தனத்தால் விளையாடினார்களா சன்ரைசர்ஸ் அல்லது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மேலும் வலுத்துபடுத்துவதற்கான 'உஷ் கண்டுக்காதீங்க' தருணமா எனத் தெரியவில்லை.

வாட்ஸன், ராயுடு பேட்டிங்கின் போது தொடக்கத்தில் பீல்டிங் முறை மிகவும் மோசமாக அமைக்கப்பட்டு இருந்தது. லாங் ஆன் திசையில் பீல்டர்களை நிறுத்துவதற்குப் பதிலாக மிட்ஆனில் தள்ளித் தள்ளி  பீல்டர்களை நிறுத்தி பவுண்டரிகள் அதிகமாகச் செல்வதற்கு சன்ரைசர்ஸ் அணி வழிவகுத்துக் கொடுத்தது.

அதிலும் தோனி அடித்த பந்தை லெக் திசையில் மணிஷ் பாண்டே கோட்டை விட்ட கேட்ச்சை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கையில் விழுந்த பந்தை, தெரியாமல் பிடித்துவிட்டோம் என உதறியதுபோல் கேட்சை விட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்ஸன், ராயுடுவின் பேட்டிங் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமாகப் பந்துவீசிய சென்னை அணி அதில் பாடம் கற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசியது.

சாஹரும், தாக்கூரும் எதிரணிக்கு நெருக்கடி தரும் விதத்திலேயே பந்துவீசியது சிறப்பாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆப் சுற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. ஆட்டநாயகன் விருதை ராயுடு பெற்றார்.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 8 வெற்றிகள், 4 தோல்விகள் என 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 9 வெற்றி, 3 தோல்வி என 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சிஎஸ்கே அணியில் கரண் சர்மாவுக்கு பதிலாக சாஹர் சேர்க்கப்பட்டு இருந்தார். சன்ரைசர்ஸ் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா வாய்ப்புப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஷிகார் தவாண், ஹேல்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சென்னை அணியின் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக வீசிய சென்னை பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினர். குறிப்பாக சாஹர், தாக்கூர் ஆகிய இருவரும் கட்டுக்கோப்பாக தொடக்கத்தில் இருந்து பந்துவீசி சன்ரைசர்ஸ் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்கள்.

முதல் ஓவரை நெருக்கடியாக வீசிய சாஹர், ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்து அசத்தினார். தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் தவாண் ஒரு பவுண்டரி விளாசினார். வில்லி வீசிய 3-வது ஓவரில் தவாண் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்த முனைந்தார்.

4-வது ஓவரை மீண்டும் சாஹர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே சாஹர் பந்துக்கு திணறிய ஹேல்ஸ் 2 ரன்களில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கி தவாணுடன் இணைந்தார். தாக்கூர் வீசிய 5-வது ஓவரில் பவுண்டரி அடித்து வில்லியம்ஸன் ரன் கணக்கைத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஹர்பஜன் 7-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் தவாண் பவுண்டரி அடித்தார். வில்லியம்ஸன் 2 ரன்கள் சேர்த்தபோது, இந்த சீசனில் 500 ரன்கள் எட்டினார் 9-வது ஓவரை வாட்சனும் தனது பங்கிற்கு கட்டுக்கோப்பாக வீசிய ரன்வேகத்தை குறைத்தார்.

பிராவோ வீசிய 10-வது வில்லியம்ஸன் 2 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். 11-வது ஓவரை வீச ஜடேஜா அழைக்கப்பட்டார். சரியான நேரத்துக்காகக் காத்திருந்த தவாண் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து அரைசதத்தை நெருங்கினார். வாட்ஸன் வீசிய 12-வது ஓவரில் ஒருசிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார் வில்லியம்ஸன்.

ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் தவாண் சிக்ஸர் அடித்து, அரைசதத்தை நிறைவு செய்தார். ஹர்பஜன் வீசிய 14-வது ஓவரில் தவாணும், வில்லியம்ஸணும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.

இருவரையும் பிரிக்க கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களையும் மாறி,மாறி வீசச் செய்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. வில்லி வீசிய 15-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பவுண்டரியும், தவாண் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள்.

16-வது ஓவரை வீச பிராவோ அழைக்கப்பட்டதற்குப் பலன் கிடைத்தது. அந்த ஓவரில் வில்லியம்ஸன், தவாண் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தனர். வில்லியம்ஸன் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஆனால் பிராவோ வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து தவாண் ஆட்டமிழந்தார். தவாண் 49 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில் 3 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 123 ரன்கள் சேர்த்து, பிரிந்தனர். ஆனால், அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனும் ஆட்டமிழந்தார்.

9 ஓவர்கள் வரை ரன்சேர்க்க சிரமப்பட்ட சன்ரைசர்ஸ் அணி 10 ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை 79 ரன்கள் சேர்த்தனர்.

தாக்கூர் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து 39 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து தீபக் ஹூடாவும், மணிஷ் பாண்டேவும் பேட்டிங்கில் சொதப்பினர். மணிஷ் பாண்டே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. ஹூடா 21 ரன்களிலும், சஹிப் அல்ஹசன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணித் தரப்பில் சாஹர் 2 விக்கெட்டுகளையும் தாக்கூர், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், ராயுடு ஆட்டத்தைத் தொடங்கினர். வாட்ஸன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். புவனேஷ் குமாரின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸரும், சந்தீப் சர்மா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸரும் வாட்ஸன் விளாசினார்.

தன்னுடைய பங்கிற்கு புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், கூக்ளி பந்துவீச்சில் மிரட்டவும் ரஷித்கான் அழைக்கப்பட்டார். ரஷித்கான் வீசிய 5-வது ஓவரில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார்.

சஹிப் அல்ஹசன் வீசிய 6-வது ஓவரில் வாட்ஸனும், ராயுடுவும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன் சேர்த்திருந்தது.

கவுல் வீசிய 7-வது ஓவரை ராயுடு ’பொளந்துகட்டினார்’. 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் என ராயுடு வெளுத்து வாங்கினார். கவுல் வீசிய 10-வது ஓவரை மீண்டும் வெளுத்துவாங்கினார் ராயுடு. ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சிறப்பாக பேட் செய்த வாட்ஸன் 31 பந்துகளில் அரைசதம் எட்டினார். ரஷித்கான் வீசிய 12-வது ஓவரில் ராயுடு சிக்ஸர் அடித்தார். புவனேஷ்குமார் வீசிய 13-வது ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரும், வாட்ஸன் ஒரு பவுண்டரியும் விளாசினர்.

இவர்களைப் பிரிக்க சகிப் அல்ஹசன் பந்துவீச அழைக்கப்பட்டார். சகிப் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராயுடு, இந்த ஓவரில் வாட்சன் ரன் அவுட் ஆகி வெளியேறினார். வாட்சன் 35 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதில் 5பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த ரெய்னா 2 ரன்கள் சேர்த்த நிலையில், சந்தீப் சர்மா பந்துவீச்சில் வந்த வேகத்தில் வெளியேறினார். அடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார்.

சகிப் அல்ஹசன் வீசிய 16-வது ஓவரில் தோனி அடித்த பந்தை லாங் ஆன் திசையில் நின்றிருந்த மணிஷ் பாண்டே கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். கிரிக்கெட் கற்றுக்கொள்பவர் கூட எளிதாக இந்த கேட்சை பிடிக்க முடியும், ஆனால், மணிஷ் பாண்டே தோனிக்கு கேட்சை நழுவவிட்டது “உஷ் கண்டுகாதீங்க” தருணத்தை நினைவு படுத்துகிறது.

(அதுமட்டுமல்ல பந்தைபிடித்துவிட்டு தெரியாமல் கேட்ச் பிடித்துவிட்டோமோ என்று நினைவு வந்து கேட்சை மணீஷ்பாண்டே நழுவவிட்டாரா அல்லது, தோனியின் ஷாட் வேகத்தில் கேட்ச்சை பிடிக்க முடியவில்லையா, விளக்கு ஒளி கண்களை கூசியதா என்பது தெரியவில்லை. இப்படியும் இருக்கலாமே..) அந்த ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி சதத்தை நெருங்கினார்.

கவுல் வீசிய 18-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ் குமார் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ராயுடு ஒரு ரன் எடுக்க, தோனி பவுண்டரி அடித்து, அடுத்த ரன்னுக்கு ராயுடுவிடம் கொடுத்தார். ராயுடு ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் முதல் சதத்தை நிறைவு செய்தார். கடைசிப் பந்தில் வழக்கம் போல் தோனி வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 62 பந்துகளில் 100 ரன்களும்(7 சிக்ஸர், 7 பவுண்டரி) தோனி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா ஒருவிக்கெட் வீழ்த்தினார்.

ஐபிஎல் அணிகளில் சிறந்த பந்துவீச்சு கொண்டதாக கருதப்படும் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் சேர்த்தும் இந்த முறை சிஎஸ்கேவை சுருட்டமுடியாமல் போனது ஏனோ?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்