ரொனால்டோவின் மோசமான ‘மிஸ்’ - காலிறுதியில் பிரான்ஸிடம் போர்ச்சுகல் பணிந்தது எப்படி? | Euro Cup

By ஆர்.முத்துக்குமார்

யூரோ கோப்பை 2024 காலிறுதிப் போட்டியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணி, போர்ச்சுகல் அணியை 5-3 என்று வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. தன் கடைசி யூரோ கோப்பையை 39வது வயதில் விளையாடிய நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கும், போர்ச்சுகலுக்கும் இது ஒர் பெரிய அடியாகிப் போனது.

இத்தனைக்கும் பிரான்சின் ஸ்ட்ரைக்கரும் கேப்டனுமான உத்வேக கைலியன் மபாப்பே காயம் காரணமாக கூடுதல் நேரத்தின் போது விலகினார். பெனால்டி ஷூட் அவுட்டில் 5க்கு 5 கோல்களை பிரான்ஸ் அடிக்க, 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடிக்க முடிந்தது. 2004 முதலான ரொனால்டோவின் யூரோ பயணம் சோகத்தில் முடிந்தது. போர்ச்சுகல் வீரர் ஜோ பெலிக்ஸின் பெனால்டி கிக் போஸ்ட்டில் அடித்து கோல் தவறிப்போக பிரான்சின் ஹெர்னாண்டஸ் வெற்றி கோலை பிரான்சுக்காக அடித்தார்.

ரொனால்டோ பெனால்டி கிக்கில் முதல் கோலை அடித்தார், ஆனால் இந்த ஆட்டத்தில் பல வாய்ப்புகளைத் தவற விட்டதற்காக ரொனால்டோ நிச்சயம் வருந்துவார். மாறாக பிரான்ஸ் அணி கடந்த யூரோ கோப்பையில் ரவுண்ட் 16 -ல் சுவிட்சர்லாந்து அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேறியது, 2022 உலகக்கோப்பை இறுதியில் அர்ஜெண்டினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் இருதயம் நொறுங்கியது பிரான்ஸ். இந்த முறை பெனால்டி ஷூட் அவுட்டிற்காக பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.

பிரான்சின் ஆஸ்மான் டெம்ப்லே, யூசுப் ஃபொபானா, ஜூல்ஸ் குண்டே, பிராட்லி பார்கோலா, ஹெர்னாண்டஸ் பெனால்டியில் கோல்களாக மாற்றினர். ரியல் டைம் 120 நிமிட நேர ஆட்டத்தில் இரு அணிகளும் ஏகப்பட்ட வாய்ப்புகளை தவற விட்டன. பிரான்ஸ் அணிக்கு உண்மையில் அரையிறுதியில் நுழையும் தன்மை இல்லை. இதற்கு முந்தைய போட்டிகளில் எதிரணிகளின் 2 ஓன் கோல்கள் மற்றும் ஒரு பெனால்டியினால் பயனடைந்துதான் காலிறுக்குள் நுழைந்தது.

இரண்டு அணிகளும் தொடக்கத்தில் தவறுகள் செய்து விடக்கூடாது என்று எச்சரிக்கைக் காட்டினர். இதனால் எந்த ஒரு வேகமான நகர்வும் இல்லாமல் ஆட்டம் மந்தமாக சொதப்பலாக இருந்தது. 16வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் புரூனோ பெர்னாண்டஸின் ஷாட் பிரான்சின் ஹெர்னாண்டஸின் காலில் பட்டு கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பயனில்லை.

இரண்டாவது பாதியில்தான் தூக்கத்திலிருந்து ஆட்டம் எழுந்தது. கைலியன் மபாப்பேயின் கோலோ காண்டேயின் சேர்க்கை பிரமாதமான ஷாட்டில் முடிந்தது. ஆனால் அருமை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து விட்டார். அங்கு எப்படி ரொனால்டோ சரியாக ஆடவில்லையோ கைலியன் மபாப்பேயும் பிரான்சில் சரியாக ஆடவில்லை.

பிறகு பிரான்ஸ் வீரர் ஹெர்னாண்டஸ் இடது புறத்திலிருந்து மேற்கொண்ட கிராஸில் பந்து போர்த்துக்கீசிய தடுப்பணைகளைக் கடந்து கோல் அருகே யாராவது காலை வைக்க மாட்டார்களா என்று ஏங்கிய நிலையில் சென்றது, யாராவது ஒரு பிரான்ஸ் வீரர் அங்கு லேசாக கோல் நோக்கி தட்டி விட்டாலே கோலாகியிருக்கும் ஆனால் அங்கு யாருமே இல்லை. வாய்ப்பு விரயமானது.

ஆனால் ஒரு கட்டத்தில் போர்ச்சுகல் அட்டகாசமான இரண்டு நகர்வுகளைச் சாத்தியமாக்கியது. புரூனோ பெர்னாண்டஸின் ஒரு அபார கோல் முயற்சியை அதை விட அபாரமாகத் தடுத்தார் பிரான்ஸ் கோல் கீப்பர் மைக்னன். பிறகு போர்ச்சுகலின் ரஃபேல் லியோ அற்புதமான ஒரு மின்னல் வேக ஓட்டத்திலும் கடைதலிலும் பந்தை பிரான்ஸ் கோல் ஏரியாவுக்குள் தள்ள பிரான்ஸ் கோல் கீப்பரும் போர்ச்சுகல் வீரர் விடின்யாவும் மட்டுமே உள்ள பாயிண்ட் பிளாங்க் வாய்ப்பு ஆனால் அதையும் மைக்னன் சேவ் செய்து விட்டார். இப்படியேதான் ஆட்டம் போய்க்கொண்டிருந்தது.

ரொனால்டோவின் மோசமான மிஸ்: 90 நிமிட ஆட்டம் முடிந்து கோல் இல்லாத நிலையில் கூடுதல் 30 நிமிடங்களுக்கு ஆட்டம் செல்ல கூடுதல் 3வது நிமிடத்தின் போது போர்ச்சுகல் விங்கர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ வேகமாக வெட்டி உள்ளே நுழைந்து கேப்டன் ரொனால்டோவுக்கு அழகாகக் கொடுத்தார், ஆனால் ரொனால்டோ கோலைத் தவற விட்டார்.

தட்டில் பந்தை வைத்து இந்தா கோல் அடி என்று கொடுத்தார் கான்சிகாவோ, ஆனால் ஒரு காலத்தில் தூக்கத்தில் கூட இது போன்ற பந்துகளை கோலாக மாற்றும் திறம் படைத்த ரொனால்டோ கோலிலிருந்து 8 அடியில் வாய்ப்பைத் தவற விட்டார், பிறகென்ன மீண்டும் கண்ணீர்தான், கான்சிகாவோ வந்து தேற்றினார், கான்சிகாவோ ரொனால்டோவை விட 18 வயது இளையவர்.

ரொனால்டோ இல்லாமல் ஆட மாட்டேன் என்ற போர்ச்சுகல் பயிற்சியாளரின் ஒரு விதமான பிடிவாதமும் காரணமாகும், ரொனால்டோவுக்குப் பதிலாக இளம் வீரர்கள் பிரமாதமாக ஆடும் வீரர்கள் இருக்கும் போது இந்த சாய்ஸ் தேவையா என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உதாரணமாக மின்னல் வேக செண்டர் பார்வர்ட் வீரரான கொன்சாலோ ரேமோஸை பயன்படுத்தாமல் போனது கடும் விமர்சனங்களை எழுப்பவே செய்யும்.

மேலும் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் செல்வதற்கு முன்னாலான இறுதி தருணத்தில் போர்ச்சுகல் லெஃப்ட் பேக் வீரர் நியுனோ மெண்டஸ் வந்த வாய்ப்பை பிரான்ஸ் கோல் கீப்பரிடம் நேராக அடித்து வீணடித்தார். அங்கு பிரான்சில் கைலியன் மபாப்பே இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பெர்னார்டோ சில்வாவின் ஹெடரின் முழு தாக்கத்தையும் ஏற்கெனவே காயம் பட்ட தன் முகத்தில் வாங்க, சிகிச்சை தேவைப்பட்டது, கடைசியில் எக்ஸ்ட்ரா டைமில் அவர் விலக நேரிட்டது.

இரண்டு கிரேட் பிளேயர்களான கைலியன் மபாப்பே, ரொனால்டோ ஆகியோருக்கிடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று வந்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியிருக்கும், கடைசியில் பிரான்ஸுக்கு மகிழ்ச்சி வெள்ளம், போர்ச்சுகல் சோக வறட்சியில் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்