டி 20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு: மும்பையில் வெற்றி ஊர்வலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி/மும்பை: மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் உருவானது. புயலால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பார்படாஸ் விமானநிலையம் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ ஏற்பாடு செய்ததனி விமானம் (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) அமெரிக்காவின் ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து நேற்றுமுன்தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிஅளவில் இந்திய அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டனர்.

சுமார் 16 மணி நேர பயணத்துக்கு பின்னர் அவர்கள் நேற்று காலை 6 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அங்குபிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,முறைப்படி பூங்கொத்து வழங்கி இந்திய அணியை வரவேற்றார். தொடர்ந்து விமான நிலைய பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்றஇந்திய அணியின் வருகையை முன்னிட்டு, டெல்லி விமான நிலைய பகுதியில் அதிகாலை 4 மணிக்கே பெருந்திரளான ரசிகர்கள் கூடினர்.

வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் அனைவரும் அருகில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் சற்று ஓய்வெடுத்தனர். பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது வீரர்கள் அனைவரும் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த ‘சாம்பியன்ஸ்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறப்பு சீருடையை அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் பிரதமர் ஆரத்தழுவி புன்னகையுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து டி20 உலகக் கோப்பை டிராபியை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் இணைந்து பிரதமர்மோடியிடம் வழங்கினர்.

சாம்பியன் கோப்பையுடன் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் ராகுல்திராவிட், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடிபுகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் இந்திய அணி வீரர்களுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைவரையும் அமரவைத்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமரை சுற்றி வீரர்கள் வட்ட வடிவில் அமர்ந்தனர். வீரர்களுடன் பிரதமர் சகஜமாக சிரித்து பேசினார்.

பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு, மாலை 4 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியினர் விமானம் மூலம் மும்பையில் பிசிசிஐ சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க புறப்பட்டனர். மாலை 6 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து இந்திய அணி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, இந்திய அணி வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசு: மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து திறந்த பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். பேருந்தின் மேல் இந்திய அணி வீரர்கள் நின்றபடி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றனர். ஒவ்வொரு முறையும் வீரர்கள் கையில் கோப்பையை ஏந்தி தூக்கி காண்பித்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை வழிநெடுகிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உற்சாகத்துடன் நடனமாடிய வீரர்கள்: சுமார் 2 மணி நேர வெற்றி ஊர்வலத்துக்கு பின்னர் இந்திய அணி வீரர்கள் இரவு 9 மணி அளவில் வான்கடே மைதானத்தை வந்தடைந்தனர்.

வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததும் உற்சாக மிகுதியில் நடனமாடினர். விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தவாறு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவை காண்பதற்காக சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். மைதானத்துக்குள் நுழைந்த இந்திய அணி வீரர்களுக்கு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், டி 20 சாம்பியனான இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

பாண்டியாவை பாராட்டிய ரசிகர்கள்: சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியின்போது ரசிகர்கள் கேலி செய்தனர். இது மும்பை அணியின் செயல் திறனை ஒட்டுமொத்தமாக பாதித்தது. தற்போது இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ‘ஹர்திக், ஹர்திக்’ என ஆரவார கோஷமிட்டு ரசிகர்கள் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

அன்றும்... இன்றும்.. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. அந்த தொடரில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியை வெற்றிகரமாக முடிக்க தவறியது.

அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்து துவண்டு இருந்த இந்திய அணி வீரர்களை அவர்களின் ஓய்வு அறைக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட ஒவ்வொரு வீரர்களையும் கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தார். இதன் பின்னர் தற்போது 7 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன் 22 கோப்பையுடன் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்